Oct 12, 2010

கர்நாடக கரசேவையும் எடியூரப்பாவின் நிர்வாண அபிஷேகமும்.

நல்லொழுக்க சீலர்களும், உண்மையைத் தவிர வேறு எதையும் பேசி அறியாதவர்களும், நமது பாரம்பரியமிக்க ஹிந்து தர்மத்தின் காவலர்களும், சாட்சாத் ஸ்ரீராமபிரானின் கலியுக அவதாரமுமான சங்க பரிவாரின் “காக்கி டவுசர்” கர்நாடகத்தில் கந்தல் கந்தலாக கிழிந்து தொங்குகிறது.

குமாரசாமியின் தலைமையில் “ரத யாத்திரை” கிளம்பிய 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் மற்றும் 5 சுயேச்சை உறுப்பினர்கள், தேசமெல்லாம் சுற்றியபின் கடைசியில், “இராவணன் ஆட்சிதான் (இது கருணாநிதி பற்றிய வேதாந்தியின் வர்ணனை) எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு” என்று சென்னையில் சரணடைந்தது குறித்த வரலாறு வாசகர்கள் அறிந்ததே. ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் எல்லாம் நடந்து யுத்த காண்டமும் நேற்று முடிந்து விட்டது. பட்டாபிஷேகம்தான் பாதியில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பாரதிய ஜனதாவை ஆதரிக்கும் என்.ஆர்.ஐ அம்பிகள் இந்த காண்டத்தை, condom என்று புரிந்து கொண்டு, எங்களை ஹிந்து விரோதிகளாக சித்தரிக்கும் அபாயம் இருப்பதால் இது சமஸ்கிருத “காண்டம்” என்று தெளிவு படுத்திவிட்டு விசயத்துக்கு வருகிறோம்.

நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் சட்டையைக் கிழித்துக் கொண்டு எம்.எல்.ஏக்கள் நிற்கும் காட்சியை ஒளிபரப்பிய ஆங்கில சானல்கள். கான்ஸ்டிடியூசனல் கிரைசஸ் (constitutional crisis) என்று அதனை வர்ணித்தன. சட்டை கிழிந்ததனால் அரசியல் சட்டமே கிழிந்து விடுவதில்லை. “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று கவுண்டமணி சொல்வது நம் காதில் விழுகிறது. இருப்பினும், மேற்படி சட்டை கிழிந்த எம்.எல்.ஏக்கள் எல்லாம் இந்து ராஜ்ஜியம் அமைப்போம் என்று கூக்குரல் போடும் பாரதிய ஜனதா கட்சிகாரர்கள் என்பதுதான் இதில் வேடிக்கை.

முன்னொரு காலத்தில் அயோத்தி மாநகரத்தில் பாப்ரி மஸ்ஜித் என்றொரு கட்டிடம் இருந்தது. டிசம்பர், 6, 1992 அன்று அதனை சங்கபரிவார பயங்கரவாதிகள் இடித்துத் தள்ளியவுடன், அந்த இடத்துக்கு “சர்ச்சைக்குரிய இடம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மேற்படி சர்ச்சைக்குரிய இடம் ராமன் பிறந்த இடம் என்று ஹிந்துக்கள் (அதாவது பாரதிய ஜனதா) நம்புவதால்,அதை அவர்கள் பெயருக்கு எழுதி போன மாதம் (கட்ட பஞ்சாயத்து பண்ணியது) தீர்ப்பளித்தது அலகாபாத் (ஹிந்து) உயர்நீதிமன்றம்.

டிசம்பர் 6 போலவே, அக்டோபர் 11 ம் இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள். நேற்று அதிகாலை 6 மணிக்கு 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களையும், எடியூரப்பா அரசை முன்னர் ஆதரித்த 6 சுயேச்சை எம்.எல்.ஏக்களையும் பதவி நீக்கம் செய்தார் சபாநாயகர். அதிகாலை 6 மணிக்கு சட்டமன்றம் கூடிவிட்டதோ என்று வாசகர்கள் எண்ண வேண்டாம். அவாளுக்கு தேவைப்படும்போது சட்டசபை அதிகாலையில் கூடும். உயர்நீதிமன்றம் நடுராத்திரியிலும் பெயில் கொடுக்கும். “தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே” என்ன புரியலையா? இதுதான் மனுதர்ம மொழி, மனுதர்ம மந்திரம்.

இப்போது இந்த 11+6 பேருடைய “ஸ்திதி” என்ன என்பது குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல் சட்டப்புலியும் முன்னாள் அட்டார்னி ஜெனரலுமான சோலி சோரப்ஜியை இறக்கியிருக்கிறது பாரதிய ஜனதா. நேற்று இரண்டரை மணிநேரம் விவாதம் நடந்ததாம். இன்று காலை 10.30 முதல் நீதிமன்றத்தில் விவாதம் நடக்கிறது.

“அந்த 11+6 பேரும் தலா 25 கோடி வாங்கிவிட்டார்கள். அவர்கள் என் அரசுக்கு எதிராகத்தான் வாக்களித்திருப்பார்கள் என்பது என் நம்பிக்கை. அதனால் அவர்களை (டிஸ்மிஸ்) இடித்து விட்டேன்” என்கிறார் எடியூரப்பா. “பணம் வாங்கினோமா இல்லையா என்பது பிரச்சினை இல்லை. கட்சிக் கொறடாவை மீறி வாக்களிக்காத போது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எங்களை (டிஸ்மிஸ்) இடித்தீர்கள்?” என்பது 11 பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்களின் கேள்வி.

சுயேச்சை எம்.எல்.ஏக்களின் வாதம் இன்னும் சுவையானது. “நாங்கள் கோவிலும் அல்ல மசூதியும் அல்ல. எந்தக் கட்சி வேண்டுமானாலும் கட்டிடம் கட்டக் கூடிய காலி மனையே நாங்கள். காலி மனையை சபாநாயகர் எப்படி “இடிக்க” முடியும்?” என்பது அவர்களுடைய கேள்வி.

இந்த 11+6 பேரையும் ஓட்டுப் போட அனுமதித்து தன்னுடைய ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்க எடியூரப்பா தயாராக இல்லை. டிசம்பர் 6, 1992 அன்று கடப்பாரை சேவை நடத்தி, பாபர் மசூதியை சர்ச்சைக்குரிய இடமாக மாற்றியதைப் போலவே, குரல் வாக்கெடுப்பு நடத்தி, இடிபாடுகளின் மேல் ராம் லல்லாவை நிற்க வைத்து டென்டு அடித்து இதுதான் “கோயில்” என்று இரண்டு விரலைக் காட்டி விட்டார் எடியூரப்பா.

இப்போது நீதிமன்றம் என்ன செய்யும்? ஹிந்து சமுதாயத்தின் பிரதிநிதியான எடியூரப்பாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து ராமஜென்ம பூமியை அவருக்கு எழுதிக் கொடுக்குமா? அல்லது 11+6 வழங்கும் சான்றாதாரங்களைப் பரிசீலிக்குமா? இதுதான் இந்தியா தற்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அரசியல் சட்ட நெருக்கடி.

இன்றைக்கு இப்பிரச்சினை குறித்து தலையங்கம் எழுதியிருக்கிறது தினமணி. “தனது அரசுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை என்பதும், பாஜக உறுப்பினர்கள் 11 பேரும், சுயேச்சை உறுப்பினர்கள் 5 பேரும் எதிரணியில் சேர்ந்து விட்டார்கள் என்பதும் தெரிந்த பிறகும், முதல்வர் எடியூரப்பா பதவியில் நீடிக்க ஏன் பிரம்மப் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டும்? துணிந்து சட்டப்பேரவையை சந்தித்து, வாக்கெடுப்பு நடத்தி வெற்றியோ, தோல்வியோ, துணிவுடன் எதிர்கொண்டிருந்தால் அவரது மதிப்பும் மரியாதையும் இமயமாக உயர்ந்திருக்குமே..” என்று தினமணி அங்கலாய்த்திருக்கிறது.

என்ன செய்வது, பாபர் மசூதியில்தான் ராமர் பிறந்தார் என்பதை விவாதம் நடத்தி ஆதாரபூர்வமாக நீரூபித்திருந்தால் அத்வானியின் மதிப்பும்தான் இமயமாக உயர்ந்திருக்கும். ஆனால் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா? அதற்காகவல்லவோ கடப்பாரையைக் கையில் எடுத்தார் அத்வானி!

எடியூரப்பாவின் “மதிப்பு“ இமயம் போல உயர்ந்திருக்குமாம். போன வருசம் நவம்பர் மாதம் ரெட்டி சகோதரர்களிடம் சிக்கி, தொலைக்காட்சி காமெராக்களின் முன்னால் கண்ணீர் விட்டு அழுதாரே எடியூரப்பா, அன்றே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தால் அவருடைய மதிப்பு கிரானைட் மலையை விட இரண்டு அங்குலம் அதிகமாகவே உயர்ந்திருக்கும். அது எடியூரப்பாவுக்கு தெரியாதா என்ன?

இருப்பினும் மதிப்பு என்ற சொல்லுக்கு என்ன பொருள்? பொருள் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? இவையல்லவோ எடியூரப்பாவும் ஹிந்து சமூஹமும் எதிர்கொள்ளும் தத்துவஞானக் கேள்விகள். இந்த பிரம்ம விசாரங்களுக்கான விடைகள் “ரெட்டியோபநிஷத்”தில் அல்லவோ கொட்டிக் கிடக்கின்றன!

“இராம பிரானே தேசிய நாயகன், ஹிந்து கலாச்சாரமே இந்தியக் கலாச்சாரம், ஹிந்து தர்மம்தான் ஜனநாயக பூர்வமானது” என்பவையெல்லாம் சங்கபரிவாரத்தின் நம்பிக்கைகள். “நேற்றைய குரல் வாக்கெடுப்பில் தனது ஆட்சி வெற்றி பெற்றுவிட்டது” என்பதும்கூட எடியூரப்பாவின் நம்பிக்கைதான்.

11+6 பேருடைய ஸ்திதி சர்ச்சைக்குரியது என்றும், நேற்றைய குரல் வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றுவிட்டது என்பதும் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ரவி சங்கர் பிரசாத், அசோக் சிங்கால், இல.கணேசன், பொன் இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் அடங்கிய பெரும்பான்மை ஹிந்து சமூஹம் மற்றும், ஹிந்து சமூஹத்தை வழிநடத்துகின்ற “ஹிந்து தர்ம சன்ஸாத்” தின் வசிஷ்டர்கள் ஆகியோர் அனைவரது நம்பிக்கை. இந்த நம்பிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் 25 ஆவது பிரிவின்கீழ் வருகிறது. (25 ஆவது பிரிவு என்பது மத நம்பிக்கை தொடர்பான அரசியல் சட்டப்பிரிவு)

ஹிந்துக்களின் நம்பிக்கை குறித்தெல்லாம் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ன? பாபர் மசூதி தொடர்பான டைட்டில் சூட்டில், பட்டா-பாத்தியதையையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு, ஹிந்துக்களின் நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியதே அலகாபாத் உயர்நீதிமன்றம், அதுதான் இனி ஹிந்துக்கள் தொடர்பான எல்லா வழக்குகளுக்கும் வழிகாட்டி.

விசாரிப்பதென்றால் அரசியல் சட்டத்தின் 25 ஆவது பிரிவின் கீழ் கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த விசாரணையை நடத்தட்டும். அப்போதுதான் இந்த அரசியல் சட்ட நெருக்கடியிலிருந்து இந்தியா மீள முடியும். இந்திய அரசியல், ஹிந்து தர்மத்தினால் வழிநடத்தப்பட்டால் மட்டும்தான் நாட்டில் நல்லொழுக்கத்தையும் நிலைநாட்ட முடியும்.ரெட்டி பிரதர்ஸ் வாழ்க! நல்லொழுக்கம் வாழ்க! குரல் ஓட்டு வாழ்க!

ஜெய் ஸ்ரீராம்! ஸ்ரீராம ஜெயம். வாழ்க மனுதர்மாம். வாழ்க ஹிந்துத்துவா.

நன்றி: வினவு.

No comments: