Nov 23, 2010

முஸ்லிம்களின் உரிமை பறித்த சுதந்திர இந்தியா.

Wednesday, November 24, 2010 :இந்திய நாடு விடுதலை அடைந்த பின்னர் நாட்டு விடுதலைக்கு அதிகமதிகம் பாடுபட்ட மக்களுக்கு ஆள்வோரை மிஞ்சும் வகையில் நீதிமன்றங்கள் தொடர்ந்து அநீதியை இழைத்து வந்தன. வெள்ளையர்கள் ஆண்ட போது காப்பற்றப்பட்ட முஸ்லிம்களின் வழிப்பாட்டுரிமை சுதந்திர இந்தியாவில் பறிக்கப்பட்ட சோக வரலாற்றை நடுநிலையாளர்களும், முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாகும்.

நீதிமன்ற அநீதி – 1
1949 டிசம்பர் 22ம் தேதி இரவோடு இரவாக பாபர் பள்ளியில் ராமர், சீதை, லட்சுமணன் சிலைகளைக் கொண்டு போய் வைத்த சமூக விரோதிகள் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தனர்.

ஒரு விநாடியில் அதைத் தூக்கி வெளியே போடுவது தான் சட்டப்படி செய்ய வேண்டிய காரியம் என்ற போதும் நீதிபதி அந்தஸ்தில் உள்ள கே.கே நய்யார் அதை அப்புறப்படுத்த மறுத்து உத்தரவிட்டார். நீதியின் பெயரால் நடந்த முதல் அநீதி இது. இந்த நீதிபதி பின்னாளில் ஜனசங்கம் என்ற சங்பரிவார இயக்கத்தில் சேர்ந்தார்.

நீதிமன்ற அநீதி – 2
சிலைகளை அப்புறப்படுத்தக் கோரியும், அந்த இடத்தை முஸ்லிம்கள் வசம் ஒப்படைக்கக் கோரியும் முஸ்லிம்கள் வழக்குத் தொடுத்தனர். ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் சிலைகளைக் காப்பாற்ற ரிஸீவரை நியமித்து தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. இது இரண்டாவது அநீதியாகும்.

நீதிமன்ற அநீதி – 3
1950 ஜனவரி 16 அன்று சிலைகளை அகற்றக் கூடாது என்று கோரி கோபால் சிங் விஷாரத் பைஸாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவரது கோரிக்கையை ஏற்று சிலைகளை அகற்றக் கூடாது என்று இடைக்கால உறுத்துக் கட்டளை உத்தரவு பிறக்கப்பட்டு மூன்றாவது அநீதி அரங்கேற்றப்பட்டது.

நீதிமன்ற அநீதி – 4
மகந்த் பரமஹம்ஸ ராமச்சந்திர தாஸ் என்பவர் பள்ளிவாசலுக்குள் வைக்கப்பட்ட சிலைகளுக்குப் பூஜை செய்ய அனுமதி கேட்டு வழக்குத் தொடுக்கிறார். 1950 டிசம்பர் 5 ல் இதற்கு அனுமதிக்கப்படுகிறது. அதாவது சட்ட விரோதமாக பள்ளிவாசலுக்குள் சிலையை வைத்து விட்டு அந்தச் சிலைகளுக்கு பூஜை செய்ய அனுமதித்ததற்கு மதவெறி தவிர வேறு சட்டக் காரணம் ஏதுமில்லை. இது காவி நீதிமான்கள் செய்த நான்காவது அநீதியாகும்.

நீதிமன்ற அநீதி – 5
இந்த வழக்கில் நிர்மோகி அகாரா என்ற அமைப்பு தன்னையும் நுழைத்துக் கொண்டது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வகையில் அது வழக்கு தொடுத்தபோது எடுத்த எடுப்பிலேயே அதைத் தள்ளுபடி செய்ய வேண்டிய நீதிபதிகள் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதன் மூலம் ஐந்தாவது அநீதியை அரங்கேற்றினர். பாபர் பள்ளிவாசல் என்ற ஒன்று இல்லை; அது ஆரம்பம் முதல் எங்களிடம்தான் உள்ளது. கோவிலாகத்தான் இருந்து வருகிறது. பாபர் இடிக்கவும் இல்லை; மசூதி கட்டப்படவும் இல்லை. அது கோவிலாகத்தான் இருக்கிறது; இதில் முஸ்லிம்கள் இடையூறு செய்யக் கூடாது என்பதுதான் அந்த வழக்கு.

1950 டிசம்பர் 17ல் இந்த வழக்கு தொடரப் பட்டது. உண்மைக்கு மாறான இந்த வழக்கை எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யாமல் இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு அநீதியை நிலை நாட்டியது. (இந்த அமைப்புக்குத்தான் மூன்றில் ஒரு பங்கு என்று அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது)

முஸ்லிம்கள் தரப்பிலும், வக்ஃபு வாரியத்தின் தரப்பிலும், இந்துக்கள் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு உ.பி. அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அலஹாபாத் உயர் நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. கீழமை நீதிபதிகளிடம் இருக்கும் அளவுக்கு மதவெறி மேல் நீதிமன்ற நீதிபதிகளிடம் இருக்காது என்று முஸ்லிம்கள் குருட்டு நம்பிக்கை வைத்திருந்தனர். அதிலும் தோல்விதான்.

நீதிமன்ற அநீதி – 6
ஒரு இடம் யாருக்குச் சொந்தம் என்பதை முடிவு செய்வதற்கு அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யுமாறு சட்டத்தில் கூறப்படவில்லை. உலகத்தில் எந்த நாட்டிலும் இத்தகைய சட்டம் இல்லை. ஆனால் நீதிபதிகள் சட்ட விரோதமாக அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யுமாறு உத்தரவிட்டனர்.

நீதிமன்ற அநீதி – 7
இந்த வழக்கை வக்ஃபு வாரியம் – பாபர் மஸ்ஜித் கமிட்டி, நிர்மோகி அகாரா என்ற அமைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது. இதில் புதிதாக யாரும் சட்டப்படி உரிமை கோர முடியாது. ஆனால் பார்ப்பன சங்பரிவாரக் கும்பல் உலகமே காரித்துப்பும் வகையிலான கேவலமான செயல் மூலம் மேலும் சிலரை வழக்கில் நுழைத்தது. இதுதான் நடந்த அநியாயத்திலேயே மிகப் பெரியது. ஒரு சொத்து சம்பந்தமாக வழக்குப் போடுவதாக இருந்தால் அந்தச் சொத்தில் விவகாரம் ஏற்பட்டு 12 ஆண்டுகளுக்குள் வழக்குப் போட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. இந்தச் சட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட மைனர்களுக்கும், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் விலக்கு உண்டு.

ஒரு மைனரின் சொத்தை ஒருவர் அபகரித்துக் கொண்டால் அவர் 12 ஆண்டுகள் கழித்த பின்பும் வழக்குப் போடலாம். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தச் சொத்து குழந்தை ராமருக்கு(ஹிந்து கடவுள்) உரியது. குழந்தை ராமர் (ஹிந்து கடவுள்) காலாகாலம் மைனராவார். எனவே (ஹிந்து கடவுள்) ராமர் என்றும் மைனராக உள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம். மைனர் நேரடியாக வழக்குத் தொடர முடியாது என்பதால் அவர் சார்பில் அவரது கார்டியன் வழக்குத் தொடரலாம் என்று வாதிட்டு ராமர் பெயரில் வழக்கு தொடரப்பட்டது.அதாவது எனக்குச் சொந்தமான இடத்தில் பாபர் என்பவர் 450 ஆண்டுகளுக்கு முன் கோவிலைக் கட்டினார். இதற்கு நீதி வழங்க வேண்டும் என்பதுதான் வழக்கு.

ராமர் பிறந்த இடம் மக்களால் வழிபாடு நடத்தப்படுகிறது என்றும் அது மனித அந்தஸ்தை அடைந்து விட்டது என்றும் அந்த மைனரும் வழக்குத் தொடரலாம் என்றும் வாதிட்டு அதன் காப்பாளர் என்ற பெயரில் 1989ல் வழக்குப் போட்டு தங்களையும் வழக்கில் சேர்க்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. தியோகி நந்தன் அகர்வால் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவர்தான் இந்த வழக்கைத் தொடர்ந்தவர். அதாவது மைனரான ராமர் சார்பிலும்,அந்த இடத்தின் பாதுகாவலர் என்ற பெயரில் இவர் வழக்கில் சேர்க்கப்பட்டார்.

உலக மக்கள் இதை அறிந்தால் இந்நீதித்துறையைப் பற்றி என்ன நினைப்பார்கள். காரித்துப்புவார்களே என்ற குறைந்த பட்ச கூச்சம் இன்றி வழக்கில் சேர்க்கப்பட்ட அதிசயம் நடந்தது.உலக நீதிமன்ற வரலாற்றில் இதுபோன்று நீதிமன்றங்கள் செயல்பட்டிருக்காது. ஆயினும் உள்ளார்ந்த ஹிந்துமத உணர்வின் காரணமாக இவர்களும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்தக் கோமாளித்தனத்தின் அடிப்படையில்தான் மைனர் ராமருக்கு மூன்றில் ஒரு பங்கு என்று தீர்ப்பளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற அநீதி – 8
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடிப்படை இல்லாமலும், உள்நோக்கத்துடனும் அகழ்வாராய்ச்சிக்கு உத்தரவிட்டதன் மூலமும், ராமரை வாதியாக ஆக்கியதன் மூலமும் இப்போதைய தீர்ப்புக்கு அடித்தளம் அமைத்தனர். அதன் அடிப்படையில் மைனர் ராமருக்கு மூன்றில் ஒரு பங்கு, நிர்மோகி அகாராவுக்கு மூன்றில் ஒன்று, முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒன்று எனத் தீர்ப்பளித்து மாபெரும் அநீதியை இழைத்தனர்.அதாவது இல்லாத ராமரை வழக்கில் சேர்த்து அவரையும் அடுத்தவர் சொத்துக்கு பங்காளியாக்கி விட்டனர்.பள்ளிவாசலே அங்கே இருக்கவில்லை. பாபர் மசூதியை இடிக்கவும் இல்லை. இது கோவிலாகத்தான் இருக்கிறது என்ற புளுகு மூட்டையை அப்படியே நம்பி அவர்களுக்கு மூன்றில் ஒரு பங்கு, பள்ளிவாசலின் உரிமையாளர்களுக்கு மூன்றில் ஒன்று.

நீதிமன்ற அநீதி – 9
அகழ்வாராய்ச்சி அறிக்கையில் கோவில் இடிக்கப்பட்டு பள்ளிவாசல் கட்டப்பட்டதாகக் கூறப்படாத போதும் கோவிலை இடித்து விட்டு பாபர் பள்ளிவாசலைக் கட்டினார் என்ற அவதூறை நீதிமன்றம் கூறியது.

நீதிமன்ற அநீதி – 10
அகழ்வாராய்ச்சியில் விலங்குகளின் எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்ட பின்பும் அது கோவிலாக இருந்திருக்க முடியாது என்பது இதன் மூலம் நிரூபணமான பின்பும் அது கோவில்தான் என்று கூறியதன் மூலம் பத்தாவது அநீதி அரங்கேற்றப்பட்டது.

நீதிமன்ற அநீதி – 11
எந்த இடத்தில் பள்ளிவாசலின் மையப்பகுதி இருந்ததோ அந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார். எனவே அது அவருக்குத்தான் சொந்தமானது என்றும் இந்த நீதிபதிகள் தவறாக தீர்ப்பளித்து விட்டனர். 18 லட்சம் ஆண்டுக்கு முன்னால் ஒருவர் இந்த இடத்தில் பிறந்தார் என்று ஒருவன் கூறினால் அதை சிந்தனையுள்ள எவரும் ஏற்க முடியாது.

நீதிமன்ற அநீதி – 12
பாபர் பள்ளிவாசல் இஸ்லாமியச் சட்டப்படி பள்ளிவாசலே அல்ல என்று கூறிய நீதிபதி நீதி வழங்குவதில் தவறி விட்டார்.

இப்படி அடுக்கடுக்கான அநீதிகளைத்தான் நீதிபதிகள் பாபர் மஸ்ஜித் வழக்கில் தொடர்ந்து கடைப்பிடித்து வந்துள்ளனர். எனவே இது போன்ற அநீதிகளை அம்பலப்படுத்தி நீதித்துறையை தட்டிக் கேட்கத் தவறினால் பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்படும்
அபாயம் இருப்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அநீதிகளுக்கு தீர்வு தான் என்ன?

நன்றி: ஏகத்துவம் மாத இதழ்

No comments: