Nov 19, 2010

வெற்றிக்கு காத்திருப்போம்!


பாப்ரி மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இந்திய மக்கள் ஒவ்வொரு வரின் முகத்திலும் பூசப் பட்ட அழுத்தமான கரி என்றால் அது மிகை அன்று... நீதியை, சட்டத்தின் ஆட்சியை, மத சார்பின்மை தத்துவத்தின் மீது நம்பிக்கை வைத்து இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை அலகாபாத் நீதி மன்ற தீர்ப்பு தகர்த்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

ஒரு நாட்டின் கறை படியா கடைசி நம்பிக்கையே நீதி பரிபாலனம் என கூறப்படும்போது, அந்த நீதி பரிபாலனம் விமர்சனத்திற்கு ஆளாகும்போது சாமான்ய மக்களால் அதிர்ச் சியடையாமல் இருக்கமுடியாது. வேண்டியவர் வேண்டாதவர் என பாகுபாடு பார்க்காது நீதியை நிலைநாட்டுவது. தான் கூர்மையான நீதி பரிபாலனத்தின் இயல்பாகும். ஆனால் அயோத்தியில் அமைந்திருந்த பாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்கில் மட்டும் நீதி எப்போதுமே நத்தை வேகத்தில் ஆமை வேகத்தில் நகர்வது இந்திய முஸ்லிம்களின் வேதனையை நாளும் அதிகப்படுத்திவருகிறது. 22.12.1949 அன்று பாப்ரி பள்ளிக்குள் சட்டவிரோதமாக திருட்டுத்தனமாக ராமன்,சீதை, லட்சுமணன் உள்ளிட்ட சிலைகள் இரவோடு இரவாக வைக்கப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை முஸ்லிம்கள் சட்டயுத்தம் நிகழ்த்தியும் அவர்களது உரிமைக்கனவு நனவாகாமலே போனது.. 60 ஆண்டுகாலமாக கொஞ்சம் உயிர்வாழ்ந்த நம்பிக்கை 2010 செப்டம்பர் 30ஆம் தேதி நஞ்சூட்டி முழுசாக கொல்லப்பட்டது.

இந்த நிலை எவ்வாறு ஏற்பட்டது என பார்க்கப்போனால் நாம் 1925 ஆம் ஆண்டு பின்னோக்கி செல்லவேண்டியிருக்கிறது.ஆர்.எஸ்.எஸ் என்ற சங்கப்பரிவார் உருவாக்கப்பட்ட அன்றிலிருந்து அந்த பாசிச சக்தி இந்திய மக்களின் ஒவ்வொரு அம்சங்களிலும் ஒரு வைரஸாக ஊடுருவியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தி அப்பாவி இந்து மக்களை உழைக்கும் மக்களை ஒருவருக்கொருவரை மோதவிட்டு ரத்தம் குடிக்கும் இழி செயலை அந்த தீய சக்தி தொடர்ந்து செய்து வருகிறது . அதன் விளைவே நாட்டின் தேசத்தந்தை என அழைக்கப்பட்ட காந்தியாரை இழந்தோம். பாப்ரி பள்ளிவாசலை இழந்தோம். இப்போது நீதித்துறையிலும் தற்போது பாசிசத்தின் சுவடுகள் தென்படத் தொடங்கிவிட்டன.

இதுவரை மறைமுகமாக தென்பட்ட சுவடுகள் தற்போது அலகாபாத் தீர்ப்பின் வாயிலாக வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. பாசிசம் என்ற நரி பசுத்தோல் போர்த்தி உலாவரத் தொடங்கியுள்ளது. அது சொல்வதை இந்திய அரசியல் அரங்கில் உள்ள பிரதான சக்திகள் கூட வழிமொழியத் தொடங்கியுள்ளது அபாயத்தின் உச்சக்கட்டம் .

இது போன்ற சூழலில் தீய சக்திகளின் சதிகளுக்கு இலக்காகாமல், நாம் அமைதி காப்பதோடு இந்திய மக்களின் அனைத்து தரப்பினரிடையேயும் நம் தரப்பு கருத்தை இணக்கத்துடனும் திறந்த மனதுடனும் முன்வைப்போம். உச்ச நீதிமன்றத்தில் நியாயம் வெல்லும் வரை நல்லெண்ண பூக்களை மலரச்செய்வோம். சதிகார கோட்டத்தின் சதி வலைகளை ஒற்றுமையுடன் அறுத்தெறிவோம். நாளைய வெற்றிக்கு இன்றே காத்திருப்போம்.

நன்றி : த மு மு க