Dec 21, 2010

20 லட்சம் கோடி! மாயம்?

ஊழல் செய்த பணம், வரி கட்டாமல் ஏமாற்றிய பணம், கமிஷனாக வாங்கிய பணம் என பல வழிகளில் வெள்ளைக் காலர் வில்லன்கள் சம்பாதிக்கும் பணமெல்லாம் கறுப்புப் பணமாகி கடைசியில் வெளிநாட்டு வங்கிகளின் லாக்கர்களை தஞ்சமடைந்து விடுகிறது. இப்படி வெளிநாட்டு வங்கிகளின் லாக்கர்களை நிரப்பிக் கொண்டிருக்கும் கறுப்புப் பணம் எவ்வளவு என்பது இன்னும்கூட தெளிவில்லாமல் இருக்கிறது. சிலர், 4 லட்சம் கோடி என்கிறார்கள். இன்னும் சிலர் 7 லட்சம் கோடி என்கிறார்கள். ''இதெல்லாம் உண்மையில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் 2008 வரைஇங்கிருந்து வெளிநாட்டுக்குப் போன மொத்த கறுப்புப் பணம் 20 லட்சம் கோடி ரூபாய்'' என்று ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு எல்லோரையும் அதிரவைத்திருக்கிறார் அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான தேவ் கர்.

இவர் ஐ.எம்.எஃப்-ல் மூத்த அதிகாரியாக வேலை பார்த்தவர். உலகப் பொருளாதாரம் பற்றிய பல்வேறு புள்ளிவிவரங்களை விரல்நுனியில் வைத்திருப்பவர். அமெரிக்காவில் 'குளோபல் ஃபைனான்ஸியல் இன்டக்ரிட்டி’ என்கிற அமைப்பை இவர் நடத்தி வருகிறார். லாப நோக்கம் இல்லாமல் செயல்படும் இந்த நிறுவனம், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து 462 பில்லியன் டாலர் கறுப்புப் பணம் வெளியே போயிருப்பதாகச் சொல்லி இருக்கிறது. பல மாதங்கள் ஆராய்ந்த பிறகே இப்படி ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறதாம் அந்த நிறுவனம். அதுமட்டுமல்ல, இந்த இருபது லட்சம் கோடியில் 70 சதவிகித பணம் 2000 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவை விட்டு வெளியே போயிருப்பதாகவும் அந்த ஆய்வு சொல்லி இருக்கிறது. இந்த கறுப்புப் பணத்தில் பாதி வேண்டாம், கால்வாசிப் பணம் இந்தியாவுக்குத் திரும்ப வந்தாலே போதும்; நமது வெளிநாட்டுக் கடனை ஒரே மூச்சில் கட்டி, கடனே இல்லாத நாடு என்கிற பேரை பெற்றுவிட முடியும். இந்தியாவில் அத்தனை கிராமங்களுக்கும் மின்சார வசதியையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். நல்ல பள்ளிக்கூடம், சாலைவசதி என மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுக்க முடியும். ஆனால்,சுவிஸ் வங்கிகளில் கிடக்கும் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் வேலையைமுடிந்த அளவுக்கு மெதுவாக செய்கின்றனர் அரசியல்வாதிகள்.

வரும் தேர்தலிலாவது மக்கள் இதை ஒரு கோரிக்கையாக வைத்தால்தான் அந்த பணம் நமக்குக் கிடைக்கும்.- (Source- Vikatan)

இந்த ஊழல் எங்கிருந்து தொடங்குகிறது? அரசு அதிகாரிகளிடமிருந்தா? பொதுமக்களிடமிருந்தா?

இந்தக் கேள்விக்கான பதில், வருத்தம் தரக் கூடியதுதான். ஆனாலும் அனைவரும் ஏற்றுகொள்ள வேண்டியது. இருவரிடமும் தொடங்குகிறது. அதாவது, ஓர் ஆரசாங்க அலுவலகத்தில் நமக்கு வேலை நடக்க வேண்டுமானால், நாம் பணம் கொடுத்தாவது முடித்துக்கொள்கிறோம்.அதாவது, அரசு அலுவலகம் என்றாலே அங்கு பணம் கொடுக்காமல், எந்த பணியும் நடக்காது என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோம். அதனால், அவர்கள் வாய் திறந்து கேட்கும் முன்பே நாம் பணம் கொடுத்துவிடுகிறோம். இதுதான் நிஜம்.

இந்த ஊழலின் மற்றொரு விதம், மக்களின் நலத்திற்க்காக போடப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஊழல் செய்வது. பாலம் கட்டுவது, குடிசைகளை மாற்றி வீடுகள் கட்டித் தருவது, ஆறுகள், ஏரிகள், வாய்க்கால்களைத் தூர்வாருவது போன்ற பணிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு, மீதம் பணம் இருந்தால் மட்டுமே, திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். அரசு பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்வதில், அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கோ, அல்லது பணம் கொடுப்பவர்களுக்கோ, அந்த வேலையை கொடுத்துவிடுகின்றனர்.ஆட்சித் தலைவர் பதவி முதல், அங்கன்வாடி பணியாளர் நியமனம் வரை, இந்த பரவியிருக்கும் இந்த நடைமுறை, ஊழலின் மற்றுமொரு பரிமாணம்.

இப்படி அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பரவியிருக்கும் ஊழலின் ஆரோக்யமான முன்னேற்றமாக, இன்று, ஜனநாயகக் கடமையான வோட்டுப் போடுவதற்குப் பணம் வாங்குவது வரை வந்துவிட்டது. கட்சியின் பாரம்பரியத்தையும், வேட்பாளரின் தரத்தையும் பார்த்து வாக்களித்த காலம் போய், அதிகப் பணம் கொடுப்பவனுக்கே வோட்டுப் போடும் நிலை வந்துவிட்டது. இப்படிக் கொடுத்த பணத்தைதான், ஆட்சிக்கு வந்தபிறகு ஊழல் செய்து மக்களிடமிருந்து திரும்பப் பெற்றுகொள்வது நியாயம்தானே. நம்மை நெறிப்படுத்தி நியாயமான முறையில் ஆட்சி செய்பவர்களைநாமே தேர்ந்தேடுத்துக்கொள்ளத்தான் ஜனநாயக முறை தோற்றுவிக்கப்பட்டது. ஆனால் அந்த முறையிலேயே, நமக்குப் பணம் கொடுப்பவர்களை நாம் தேர்ந்தெடுத்தால், அந்த ஜனநாயகம் என்ற அமைப்புக்கு என்ன பயனிருக்க முடியும்? மக்களுக்காக, மக்களால் ஏற்படுத்தப்படும் ஆட்சிமுறை, ஜனன்னாயகம் என்பதுபோல, மக்களுக்காக, மக்களின் ஒத்துழைப்போடு நடப்பது ஊழல் என்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

இதனை மாற்ற முடியாதா?

முடியும். அதற்கு முதலில் மக்கள், தனி மனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். தங்களின் காரியம் நிறைவேற வேண்டுமென்பதற்க்காக, லஞ்சம் கொடுக்காமல், அரசு அதிகாரிகளை நேர்மையாக பணிசெய்ய நிர்பந்திக்க வேண்டும். குறுக்கு வழிகளில் பயணம் செய்யாமல், நேரடியான நடைமுறையை பின்பற்ற வேண்டும். குறைந்தபட்சம், பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதையாவது நிறுத்த வேண்டும். இது மக்கள் செய்ய வேண்டியது. அரசுத் தரப்பிலிருந்து, அரசாங்க அலுவலகங்களில் நிலவும் நடைமுறையை மாற்ற வேண்டும். R . T . O அலுவலகத்திலும், பத்திரப் பதிவு அலுவலகம் போன்ற இடங்களில் இருக்கும் விதிமுறைகளை மாற்றி, எளிமைப் படுத்த வேண்டும். இங்கு இருக்கும் விதிமுறைகள் புரியாமலே, பணம் கொடுத்து காரியம் முடிப்பவர்கள் அநேகம் பேர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் தாமதித்தல், காஷ்மீர் போல தேசம் முழுவதும், மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டு, காஷ்மீர் போல ஆர்பாட்டங்களும், வன்முறையும் நடக்க வழிவகுத்துவிடும். இந்தியா அரசாங்கம், இந்த அவசர நிலையை உணர்ந்து, தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இர்fபான்

No comments: