Dec 13, 2010

உலகத்தை முட்டாளாக்கும் ராஜ பக்சே (ஆக்டோபஸ்).

"கூரையில் ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்தில் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்."இந்தப் பழிமொழி இப்போது சரியாகப் பொருந்துவது சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்குத் தான். பிரித்தானியாவில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தைச் சமாளித்துக் கொள்ள அவர் வெளியிட்ட கருத்தே இப்படிக் கூற வைத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு தொடர்பாக ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உரையில் தெளிவுபடுத்துவதற்கு அவர் திட்டமிட்டிருந்தாராம். தமது திட்டம் சர்வதேச மயப்படுவதைத் தடுப்பதற்காக சிலர் செயற்பட்டு அந்த நோக்கத்தைத் திசை திருப்பி விட்டுள்ளதாகவும் புலம்பியிருக்கிறார் மகிந்த ராஜபக்ஸ. அவரது இந்த உரையைக் கேட்டபோது புல்லரிக்கிறது.

தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் தான் அவருக்கு எத்தனை ஆர்வம்.தமிழ்மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்குப் புலிகளே தடையாக உள்ளனர். அவர்களை அழிக்கத் தான் இராணுவ நடவடிக்கை, தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்று கூறிக் கொண்டு போரை நடத்தியவர் தான் மகிந்த ராஜபக்ஸ.

போர்முடிந்த பின்னர் அரசியல் தீர்வு வழங்குவேன் என்று கூறியவர்.ஆனால் போர் முடிந்த பின்னரும் அரசியல் தீர்வு பற்றியே சிந்திக்காதவர் அவர். தனது மனதில் உள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை உள்நாட்டில் அரசியல்கட்சிகளும் மக்களும் ஏற்க வேண்டும் என்று கூறிக் கொண்டு திரிந்தவர் திடீரென அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைத்திருப்பாரா என்ன? அரசியல் தீர்வை சர்வதேச சமூகத்திடம் முன்வைப்பதற்கு அவர் ஒக்ஸ்போர்ட்டைத் தான் தெரிவு செய்ய வேண்டும் என்பதில்லை. ஏற்கனவே கடந்த செப்ரெம்பர் மாதம் ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பதை அதற்குப் பயன்படுத்தியிருக்கலாம்.

அதைவிட எமது பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்போம் என்று கூறி வந்தவர் மகிந்த.தமிழ்மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று தமிழ் அரசியல்கட்சிகள் விடுக்கின்ற வேண்டுகோள்களை செவி சாய்க்காமல் இருக்கும் மகிந்த ராஜபக்ஸ, அதை சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கத் திட்டமிட்டிருந்ததாகக் கூறி யாரைத் தான் ஏமாற்ற முனைக்கிறார்? இதுவரை காலமும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை முட்டாளாக்கிய அவர் இப்போது சர்வதேசத்தை முட்டாளாக்க முனைகிறார்.

புலம்பெயர் தமிழர்களும் பிரித்தானியாவும் அரசியல் தீர்வை அறிவிக்கும் வாய்ப்பைக் கெடுத்து விட்டதாக அவர் புலம்பித் தள்ளியிருக்கிறார். அரசியல் தீர்வில் அவர் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால் பிரித்தானியா திருப்பிய அனுப்பிய கையோடு அதை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படிப்பட்டவர் அல்ல. இப்போதும் சரி -இனி எப்போதும் சரி அரசியல் தீர்வை அறிவிக்கின்ற எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது என்பதே உண்மை. அவரது மனதில் தீர்வு யோசனை இருப்பதாகக் கூறுவதெல்லாம் சுத்த பம்மாத்து.

அவரது மனதில் படிந்துள்ளதெல்லாம் தமிழருக்கு எதிரான இனவாதமும், குரோத மனப்பாங்கும் தான். தமிழரை எப்படியெல்லாம் அடக்கி ஆளலாம் என்று சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ஸவா அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்? அவரது இந்தக் கதைகளையெல்லாம் நம்புகின்ற நிலையில் தமிழர்கள் இல்லை.
அதனால் தான் அவர் அரசியல் தீர்வுக்கு ஒக்ஸ்போர்ட் உரையுடன் முடிச்சுப் போட்டு- கெடுத்து விட்டார்களே என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார்.

அவர் உண்மையிலேயே தமிழர் பிரச்சினையைத் தீர்க்கின்ற ஆற்றலும் விருப்பமும் கொண்டவராக இருந்தால்- அந்த அரசியல் தீர்வை உடனடியாக வெளியிடலாம்.
ஆனால் அதை அவரால் செய்ய முடியாது. ஏனென்றால் அவர் சிங்களப் பேரினவாதத்தின் சக்கரவர்த்தியாக- சிங்களப் பேரினவாதத்தின் சின்னமாக- இருக்க விரும்புகிறாரே தவிர, தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் எண்ணம் அவரிடம் துளியும் கிடையாது.

இந்த உண்மை உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும்.அதேவேளை, மகிந்த ராஜபக்ஸ போடுகின்ற வேடத்தையும், ஆடுகின்ற நாடகத்தையும் மேற்கு நாடுகள் இப்போது ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டன.எனவே, அரசியல்தீர்வு பற்றி அவர் அளக்கின்ற இந்தக் கதைகளையெல்லாம்- அவரைச் சுற்றியுள்ளவர்களைத் தவிர வேறு யாரும் நம்புகின்ற நிலையில் இல்லை. இது தான் உண்மை.

நன்றி: முகிலன்

No comments: