Dec 20, 2010

ஆர்.எஸ்.எஸ்ஸினால் இந்த தேசம் அடைந்த பலன் என்ன?

ராஷ்ட்ரீய சுயம் சேவக் என்றழைக்கப்படும் ஆர்.எஸ்.எஸ் உருவாகி 85 ஆண்டுகள் நிறைவுறுகிறது. 3 முறை தேசிய அளவில் தடைச் செய்யப்பட்ட இவ்வமைப்பின் அஸ்திவாரமே வெறுப்பின் மீதுதான் போடப்பட்டது.இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினியின் பாசிசம் என்ற விஷத்தை பருகி விருட்சமாக வளர்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டிற்கு என்ன தொண்டை ஆற்றியது என்பதைவிட இந்த தேசத்திற்கு செய்த, செய்துக் கொண்டிருக்கும் அநீதங்கள் என்ன? என்பதுக் குறித்துதான் பேசவேண்டியுள்ளது.

சுதந்திரத்திற்கு முன்னரே துவங்கிய இவ்வியக்கம் சொந்த மண்ணிலிருந்து அந்நியர்களை விரட்டியடிக்க இவர்கள் ஆயுதம் தாங்கி போர் செய்தார்களா? இல்லை அகிம்சை வழியில் போராடினார்களா? மாறாக சுதந்திர போராட்ட வீரர்களை காட்டி கொடுத்து பதவி சுகம் அனுபவித்தார்கள்.வர்ணாசிரமும், சிறுபான்மை எதிர்ப்பிலும் தங்களை வளர்த்துக் கொண்ட இந்த இயக்கம் தொடர்ந்து தேச பக்த வேடம் புனைந்து நாடகமாடி வந்தது. ஆனால், இவர்கள் இந்தியாவின் தேசிய கொடியை கூட அண்மைக்காலம் வரை அங்கீகரிக்காதவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ரகசியம்தான். சின்னஞ்சிறுசுகள் முதல் வயதானோர் வரை என சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் தனித்தனி இயக்கம் உருவாக்கி குடும்ப இயக்கமாக மாறியுள்ள ஆர்.எஸ்.எஸ் வெறுப்பை விதைத்து தேசத்தை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வேளையில் அப்போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை ஆங்கிலேயனிடம் காட்டிக் கொடுத்தது, இந்தியாவின் தேசத்தந்தை எனப் போ்ற்றப்படும் மகாத்மா காந்திஜியை கொலைச் செய்தது, வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்துத் தள்ளியது, சிறுபான்மை முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் ஆயிரக்கணக்கான கலவரங்கள் வாயிலாகவும், இன அழித்தொழிப்பின் மூலமும் கொடூரமாக கொலைச்செய்தது, தங்களின் கேடுகெட்ட லட்சியம் நிறைவேற சொந்த சமுதாய மக்களையே காவுக் கொடுக்க தயங்காதது, மக்கள் நடமாடும் பகுதிகளிலும், வணக்கஸ்தலங்களிலும், மக்கள் பயணிக்கும் ரெயிலிலும் குண்டு வைத்து பொதுமக்களை கொன்றது என தொடர்கிறது ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் தேசப்பணி.

இந்நிலையில் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஹேமந்த் கர்காரே என்ற நேர்மையான அதிகாரியால் வெளிக்கொணரப்பட்ட ஹிந்துத்துவாவின் உண்மை முகம் தொடர்ந்து அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு என ஆர்.எஸ்.எஸ்ஸின் சாயம் மீண்டும் ஒரு முறை வெளுத்துக்கொண்டிருக்கும் வேளையில்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி அமெரிக்க தூதர் திமோத்தியிடம் லஷ்கரைவிட ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதம் கொடூரமானது என்றுக் கூறிய தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

ராகுல் மட்டுமல்ல, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணனும் எஃப்.பி.ஐயின் உயர் அதிகாரியிடம் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கொடூர முகத்தைக் குறித்து பேசியுள்ளார் என்ற செய்தியை அதே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இத்தகவல்கள் வெளியானவுடன் ஆர்.எஸ்.எஸ். ஸின் அரசியல் முகமூடியான பா.ஜ.க சகட்டு மேனிக்கு அறிக்கைகளை விடுகிறது. திக்விஜய்சிங் கூறியதுபோல் எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகளல்ல! ஆனால் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களான ஹிந்துக்களெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரர்களே என்பது உள்ளங்கை நெல்லிக் கனியைப் போல் உண்மைதானே!

இந்தியாவிற்கு நாசத்தை தவிர வேறு எதனையும் தங்கள் உள்ளத்தில் கற்பனைக்கூட செய்யாத இந்த பாசிச இயக்கம் இந்த தேசத்திற்கு தேவையா? காங்கிரஸ் கட்சி தாங்கள் விடுக்கும் அறிக்கைகளும், தாங்கள் கட்சி மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானமும் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சி இந்த தேசவிரோத இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? தொடர்ந்து இந்த விஷ விருட்சத்தையும் அதன் கிளைகளையும் வளரவிடுவது எதிர்கால இந்திய தேசத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்.

ஆகவே உடனடியாக இவ்வியக்கத்தை தடைச் செய்வதோடு இவர்களுக்கும் அந்நிய நாட்டு உளவுத்துறைகளுக்கு மிடையேயான உறவை பகிரங்கப்படுத்தி, இந்த பயங்கரவாதிகளை சிறையில் தள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு உள்ளார்ந்த நேர்மை ஒன்று இருக்குமானால் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளட்டும்!

நன்றி : விமர்சகன்

No comments: