Jan 1, 2011

நாகரீகத்திற்குப் பின் அநாகரிகமா? குறளுக்குப் பின் மனுநீதியா? : தோழர் மருதையன்.


பொருளின்றி உச்சரிக்கப்படும் சில சொற்கள் உண்டு. எனினும் அவை பொருளற்ற சொற்களல்ல. ”இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி? என்ற வியப்புக்குறி இத்தகைய ரகம்.
சாதிப்படுகொலை மதக்கலவரம், வரதட்சணைக் கொலை உடன் கட்டையேற்றம்
போன்ற சமூக ஒடுக்கு முறைகளானாலும், நரபலி, தீமிதி, சோதிடம், வாஸ்து சாத்திரம்
சாய்பாபா, சிவசங்கர் பாபா போன்ற மூட நம்பிக்கைகளானாலும், கல்வியறிவின்மை மருத்துவ வசதியின்மை, குடிநீர்ப் பஞ்சம், பட்டினிச்சாவு போன்ற வர்க்கச் சுரண்டல் களானாலும், மரண தண்டனை, துப்பாக்கிச் சூடு, காவல்நிலையக் கொலை போன்ற அரசு ஒடுக்கு முறைகளானாலும் இதே கேள்வி: இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி?

கேட்பவர்கள் பாதிரியார்களாகவும், கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால் கேள்வி நியாயம்தான். கேட்பவர்கள் அறிவாளிகள் கேட்கப்படுவதோ – பாவம் நாட்காட்டி!
இருபதாம் நூற்றாண்டு என்ற நாள் என்ன செய்யும் ? நாட்காட்டி என் செய்யும்? டிசம்பர்-31 இரவு தனது கடைசி காகிதத்தையும் உதிர்த்த நாட்காட்டி ”யாமிருக்க பயமேன்” என்று இரண்டு துருப்பிடித்த ஆணிகளை மட்டுமே தனது பதிலாக நீட்டுகிறது. 2000 ஆண்டுகள் முடிந்து விட்டன, அதற்கென்ன? தனது அநாகரிகக் கொள்ளைக்கு ’எத்தனை ஆண்டுகள்’ – என்று எண்ண வேண்டிய ஜெயலலிதா ’இந்திய நாகரீகத்திற்கு 5000 ஆண்டு’ – என்று கணக்குச் சொல்கிறார்.

மதவாதம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். அடிமைகளோ பரிதாபத்துக்குரிய கிறிஸ்துவைக் காலனியாதிக்க வாதியாக்குகிறார்கள். கலியுகத்திற்கு 5001-ஆம் ஆண்டு என்று பஞ்சாங்கத்தை நீட்டுகிறார்கள் -அட்டையில் பார்ப்பனப் பாம்பு சீறுகிறது.5000 ஆண்டுகளாகவே இருக்கட்டும். அதற்கென்ன? பூச்சியங்கள் என்ன செய்யும்? பூச்சியங்களின் மாயக்கவர்ச்சியில் கணிதம் மயங்கலாம்; வரலாறு மயங்குவதில்லை. மனித குலத்தின் வரலாற்று நெடுஞ்சாலையில் தப்பிப் பிழைத்த ஒரு மைல்கல் கிறிஸ்து சகாப்தம். சாலிவாகன சகாப்தம் விக்கிரம சகாப்தம் – எனத் தங்கள் திருப்பெயரால் கல்லை நட்ட கோமாளிகளின் நடுகற்களையும் காணவில்லை. திருச்சபையின் ஆட்சியை முடித்து வைத்த மூலதனம் ஆண்டவருக்கு வழங்கிய மானியம் ”கிறிஸ்து சகாப்தம்.”

கி.பி.2001 பூச்சியங்கள் கூடக்கூட மனிதகுலத்தின் முன்னேற்றம் கூடுமெனில் வயது கூடினால் மனிதனின் அறிவும் கூட வேண்டும். இருபதால் நூற்றாண்டிலா இப்படி என்ற வியப்புக்கு விடை அறிஞர் பெருமக்களே, இருபதாம் நூற்றாண்டில்தான் இப்படி!
தங்கம், வெள்ளி, வைரம், இரும்பு, செம்பு, துத்தநாகம், யுரேனியம், கோபால்ட் – போன்ற அனைத்து உலோகங்களையும் நெல், வாழை, கரும்பு, சோளம், காப்பி என்றனைத்துப் பயிர்களையும் விளைவிக்கும் – சயர்*1 பிச்சைக்கார நாடு!

இவையெதுவுமில்லாத ஜப்பான் பணக்கார நாடு. இருபதாம் நூற்றாண்டில்தான் இது சாத்தியம்.
வானம் பொய்த்த போது மனிதர்கள் பஞ்சத்தால் செத்திருக்கிறார்கள். கறந்த பாலைச் சாக்கடையிலும் விளைந்த கோதுமையைக் கடலிலும் கொட்டிவிட்டு ஆண்டுக்கு 150 லட்சம் மனிதர்களைப் பட்டினி போட்டுச் சாகடிப்பது இருபதாம் நூற்றாண்டில்தான். கொள்ளை நோய்களுக்கு மருந்து தெரியாமல் மக்கள் மடிந்த நூற்றாண்டுகளுண்டு. மருந்து வியாபாரிகளின் கொள்ளையால் மக்கள் மடிவது இருபதாம் நூற்றாண்டு.

துன்பத்தால் துடிக்கும் நோயாளியின் சட்டைப் பையைத் துழாவியிருப்பாரா ஹெராக்ளிடஸ்?*2
கையைப் பிடிக்குமுன் பையைப் பிடித்துப் பார்க்கிறார்கள் அவரது இருபதாம் நூற்றாண்டு சீடர்கள். முன்னேற்றம் காலத்தால் அளவிடப்படுவதில்லை. சிந்துவெளியின் நகர நாகரிகத்தை அழித்தனர் - ஆரியக் காட்டுமிராண்டிகள். காலத்தால் பிந்தையதென்பதால்
ஆரியம் – முன்னேற்றமலல.

’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளுக்குப் பிந்தையதுதான் மனுநீதி.
பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர்தான் லூயி போனபார்ட்.*3அக்டோபர் புரட்சிக்குப் பிந்தையதுதான் எல்ட்சினின் ஆட்சிக் கவிழ்ப்பு. முன்னேற்றம் ஆண்டுகளால் அளவிடப்படுவதில்லை. காலம்தான் முன்னேற்றத்தால் அடையாளம் இடப்படுகிறது.இயற்கையுடன் மனிதன் கொண்ட உறவினால் காலத்தை அடையாளமிடுவதாயின் அன்று கற்காலம். இன்று கணினிக் காலம்.
மனிதனுடன் மனிதன் கொண்ட உறவினால் அடையாளமிடவதாயின் இது முதலாளித் துவத்தின் காலம்; ஏகபோக மூலதனத்தின் காலம். இருபதாம் நூற்றாண்டிலுமா இப்படி என்று கேள்விக்குறியிடுவோர் முதலாளித்துவச் சமூகத்திலுமா இப்படி என்று சொல்லிப் பாருங்கள் கேள்வியின் முரண் கேட்பவரின் நாக்கையே அறுக்கும்.

அநீதியின் திரண்ட வடிவம் மூலதனம் பாட்டாளி வர்க்கம் உழைக்க உழைக்க,
பாற்கடலைக் கடையைக் கடைய, மூலதனம் எனும் ஆலகால விஷம்தான் திரண்டு வருகிறது.
கடலின் அடியாழத்தில் கிடந்த அனைத்துக் கசடுகளும் புதிய வீரியத்துடன் மிதந்து எழும்புகின்றன.ஆப்பிரிக்கப் பழங்குடிகள்,இந்தியச் சாதிகள்,ஆப்கான் இனக்குழுக்கள்
எகிப்தி மம்மிகள், இறந்தகாலத்தின் ஆவிகளனைத்தும் மூலதனத்தின் குரலில் அலறுகின்றன.

’21-ஆம் நூற்றாண்டிலா!’ என்ற வியப்புக்குறியைக் கேள்விக்குறியாக்குங்கள்.நாகரீகத்திற்குப் பின் அநாகரிகமா? குறளுக்குப் பின் மனுநீதியா? சோசலிசத்திற்குப் பின் முதலாளித்துவமா?
என்று கேட்டுப் பழகுங்கள்.

நன்றி: இதன் மூல உரைநடை வினவு.

No comments: