Feb 9, 2011

பிரபாகரனும் & சாதி ஒழிப்பும்: ஒரு பார்வை.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழ மீனவ சமுதாயத்தின் கரையாளர் பிரிவைச் சார்ந்தவர் என்பதும், ஈழத்தில் மீனவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதும் பல பேர் அறியாத செய்தி. புலிகள் அமைப்பு ஈழத்தில் வலுப்பெறும்வரை, தமிழர்களின் தலைமை வெள்ளாள ஆதிக்க சாதியிடம் இருந்தது. அவர்கள் சாதிஒடுக்கு முறை குறித்து எந்தவொரு அக்கறையும் கொண்டிருக்கவில்லை.

தமிழர்களின் தனிப்பெரும் சக்தியாக புலிகள் வளர்ந்தபோது, சாதி ஒதுக்கலுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் (இயக்கத்தில் கலப்புத் திருமணம்தான் செய்ய வேண்டும்; இயக்கத்தில் தீண்டத்தகாத மக்களுக்கு முக்கிய பொறுப்புகள், தீண்டாமைக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்) வெள்ளாள சாதியினரிடம் இயல்பாகவே ஆத்திரத்தை மூட்டியதில் ஆச்சரியமில்லை. அந்த ஆத்திரத்தில் தொடங்கியதுதான் முக்கால்வாசி புலி எதிர்ப்பு அரசியல்.

நான்காம் கட்டப்போரில் புலிகள் இயக்கம் முற்று முழுதாக தோற்றபின்பு, ஈழ மக்களின் சம உரிமைகளுக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத - இன்றும் புலி எதிர்ப்பு அரசியல் மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், டக்ளஸ் தேவானந்தா, ஷோபா சக்தி இவர்களின் சாதி பின்புலத்தைப் பார்த்தோமானால் எல்லோரும் ஆதிக்க சாதி வெள்ளாளர்கள்.

தலித் அரசியலை முன்வைத்து இவர்கள் பேசும் புலி எதிர்ப்பு அரசியலுக்குப் மாற்றாக பிரபாகரன், தமிழ்ச்செல்வன் ஆகியோரின் ஒடுக்கப்பட்ட‌ சாதிப் பின்புலம் குறித்தும், புலிகளின் சாதியொழிப்பு நடவடிக்கைகள் குறித்தும் பேச வேண்டிய அவசியம் இங்கிருக்கும் ஈழ ஆதரவாளர்களுக்கு இருக்கிறது.

தலித் முரசு 2001 ஜனவரி இதழுக்கு அளித்த பேட்டியில் பழ.நெடுமாறன் இதுகுறித்துப் பேசியிருக்கிறார். இந்தியாவில் எப்படி பார்ப்பனர்கள் ஆதிக்க சாதியாக இருக்கிறார்களோ, அதேபோல் ஈழத்தில் வெள்ளாளர்கள் ஆதிக்க சாதியாக இருக்கின்றனர். ஈழத்தில் ‘இலங்கைத் தமிழர் காங்கிரஸ்’ என்றொரு கட்சி துவங்கிய காலத்தில் இருந்து இறுதியாக ‘தமிழர் விடுதலைக் கூட்டணி’ வரை ஏற்பட்ட தலைமை அனைத்தும் – வெள்ளாளர் தலைமைதான். இவர்களை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. போராளி இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல். எப்., டெலோ, பிளாட் என எல்லா தலைமையும் வெள்ளாளர் தலைமைதான்.

இதில், விடுதலைப் புலிகளின் தலைமை மட்டும்தான் மாறுபட்டது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், தாழ்த்தப்பட்ட மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் (மீனவர்கள் அங்கு தீண்டப்படாத சமூகமாகும்). அதனாலேயே இவர்கள் பிரபாகரனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ‘பிரபாகரனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்’ என்று வெளிப்படையாக பேசியும் இருக்கிறார்கள்.

அமிர்தலிங்கம் ஒரு பெரிய தலைவர். அவரிடம் நான் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘பிரபாகரனை நீங்கள் இணைத்துக் கொள்ள வேண்டும்; அதுதான் சரியானது’ என்றேன். அப்போது அவருடைய மகன் குறுக்கிட்டு, பிரபாகரனின் சாதியைப் பற்றி மிகவும் மோசமாக ஒரு வார்த்தையை சொல்லித் திட்டினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அமிர்தலிங்கமும் மழுப்பி விட்டார்.

பிறகு இதுகுறித்து நான் விசாரித்தபோதுதான், எனக்கு உண்மைகள் தெரிய வந்தன. சாதி ஒரு முக்கியமான காரணம். ஒரு ஆதிக்க சாதியின் பிடி போவதில் அவர்களுக்கு ஒரே கோபம். ஆனால் இன்றைக்கு இதை எல்லாம் தாண்டி பல தரப்பட்ட மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக பிரபாகரன் மலர்ந்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தை – சாதிக்கு அப்பாற்பட்ட இயக்கமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

எல்லா சாதியைச் சார்ந்த இளைஞர்களும் இதில் உள்ளனர். அதுமட்டுமல்ல இயக்கத்தில் திருமணம் செய்து கொள்வதற்குக்கூட இரண்டு நிபந்தனைகள் உண்டு. 1.சாதி மறுப்புத் திருமணம். 2.விதவைத் திருமணம். இயக்கத்தில் எல்லாத் திருமணங்களும் அப்படித்தான் நடைபெறுகின்றன. அது வேகமாகப் பரவி வருகிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் இக்கருத்து செயல்வடிவம் பெற்று வருகிறது.

விடுதலைப் புலிகளின ஆதிக்கத்தில் இருக்கிற பகுதிகளில் எல்லாம் தீண்டாமையை அடியோடு ஒழித்து விட்டார்கள். சாதிவெறியுடன் யாராவது பேசினால், செய்தால் கடுமையான தண்டனையை புலிகள் விதித்து வருகின்றனர். அங்கு நடைபெறும் போராட்டம் வெறும் அரசியல் போராட்டமாக நடைபெறவில்லை; அது சமூகப் போராட்டமாகவும் ஒரே நேரத்தில் நடைபெறுவதால், இதெல்லாம் அங்கு சாத்தியமாகிறது.

No comments: