Mar 21, 2011

தேர்தல் கமிஷன் கெடுபிடிகள்!! திக்குமுக்காடும் கட்சிகள்!!

மார்ச் 21: தேர்தல் என்றாலே தெருவுக்கு தெரு, வீதிக்கு வீதி வேட்பாளர்கள் மற்றும் கட்சிக் காரர்கள் மாறி மாறி கார்களில் வந்து பிரசாரம் செய்தபடி இருப்பார்கள். எங்கு பார்த்தாலும் ஒலி பெருக்கியில் பிரசார சத்தம் காதை பிளந்த வண்ணம் இருக்கும். அரசு சுவர்கள், தனியார் சுவர்களில் சின்னம் தேர்தல் வாசகங்கள் எழுத முன்கூட்டியே இடம் பிடித்து விடுவார்கள்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் பெயர் எழுது வது வாசகம் எழுதுவது மும்முரமாக நடக்கும். தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே திருவிழா போல் ஊரெங்கும்களை கட்டி விடும். ஆனால் இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப்பிடி உத்தரவுகளை போட்டுள்ளது.

மேலும் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடப்பதால் கெடுபிடி அதிகமாக உள்ளது. சுவர்களில் வரையப்பட்டு இருந்த சின்னம், தலைவர் களது படங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. சென்னை நகரில் ஒரு இடத்தில் கூட சின்னத்தை பார்க்க முடிய வில்லை. சுவர்கள் எல்லாம் வெள்ளையடித்து “பளிச்” என்று இருக்கிறது. சிலைகளைக் கூட அதிகாரிகள் விட்டு வைக்க வில்லை.

அண்ணா, காமராஜர், ராஜீவ்காந்தி, எம்.ஜி.ஆர்., சிலைகயும் தேர்தல் முடியும் வரை மூடவேண்டும் என்று உத்தரவிட்டது. இதனால் சிலைகளை துணியால் சுற்றி மூடி வைத்துள்ளனர். பெயர் இடம் பெற்ற கல் வெட்டும் வெள்ளை அடிக்கப்பட்டு வெளியே தெரியாத படி மறைக்கப்பட்டு விட்டது. கொடி தோரணங்களும் கண்ணில்படவில்லை. பொது இடங்களில் இருந்த கட்சி கொடி கம்பங்களும், கொடிகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்களும் எங்கும் காணப்பட வில்லை. தேர்தலுக்கு முன்பே தொடங்கும் ஆரவாரம் தம்பட்டம் எதுவும் இன்றி அமைதியாக இருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக வாகன சோதனை, வியாபாரிகளையும், பல்வேறு வர்த்த கத்தில் ஈடுபட்டுள்ளவர்களையும் முடக்கி போட்டு விட்டது.

தமிழ் நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் வாகன சோதனை நடைபெறுகிறது. முன்பு நகைக்கடைகாரர் அல்லது தொழில் நிறுவனங்கள் நடத்துவோர் அன்றாடம் வசூல் ஆகும் வியாபார பணத்தை வங்கியில் கட்ட எடுத்துச் சொல்வார்கள். இப்போது அவர்கள் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. வாகனசோதனையில் சிக்கினால் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகிறார்கள். இது போல் நிலம் வாங்க விற்க செல்வோர் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதுவரை நடந்த சோதனையில் எந்த அரசியல் பிரமுகரிடமும் பணம் சிக்கவில்லை. வியாபாரிகள், நில புரோக்கர்கள் பணம் தான் சிக்கியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ரூ.30 கோடிக்கு மேல் பணம் பிடிபட்டுள்ளது. அவை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏராளமானவாகனங்களும் சிக்கியுள்ளன. தேர்தல் முடிந்த பின்பு தான் அந்த பணத்தையும், வாகனங்களையும் திரும்ப பெறமுடியும்.

தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஆடு, கோழிகளை கூட விட்டு வைக்க வில்லை. வாக்காளர்களுக்கு பிரியாணி போடுவதற்காக மொத்தமாக கொண்டு போவதாகக் கூறி ஆடுகளையும், கோழிகளையும் பறிமுதல் செய்துள்ளனர். விற்பனைக்காக எடுத்துச் செல்லும் கொலுசுகளையும், நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.

மதுரையில் ஒரு அரசியல் கட்சியினரின் வெங்காய குடோனில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனை நடத்தினார்கள். வெளியூர் தொண்டர்களை தங்க விடாமல் செய்ய திருமண மண்டபங்களையும் பூட்டி சாவியை அதிகாரிகள் வாங்கி வைத்துக் கொண்டனர்.

திருமண பத்திரிகையை காட்டினால் திருமணத்துக்கு ஒரு நாள் முன்பு தான் திருமண மண்டப சாவி கிடைக்கும். திருவள்ளூர் அருகே தனியார் மாந்தோப்பில் ரூ.1 கோடி மதிப்புள்ள 22 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறி முதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களும் ஏராளமாக சிக்கியுள்ளன.

நெல்லை மாவட்டம் கடைய நல்லூரில் இருந்து பார்சல் லாரியில் அனுப்பி வைக்கப்பட்ட 321 புதிய அரிவாள்கள் வாகன சோதனையில் பிடிபட்டது. இவை விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் தேர்தல் நேரம் என்பதால் அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஏராளமான ஜவுளிகள், 196 விலை உயர்ந்த செல் போன்கள் சிக்கியுள்ளன. வலங்கைமான் அருகே மீன் வியாபாரி குமார் கொண்டு சென்ற ரூ.1 1/2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரிடம் சோதனையிட்ட போது 28 பேரின் வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தன. அவர் மாநகராட்சியில் இருந்து தங்கள் பகுதிக்கு வாக்காளர்களிடம் கொடுக்க மொத்தமாக வாங்கிச் சென்றது தெரிய வந்தது. அவற்றை சென்றது தெரியவந்தது. அவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

திருவண்ணாமலையில் அனுமதி பெறாமல் கட்சி கொடி கட்டி காரில் சென்ற அ.தி.மு.க. பிரமுகர் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது கார் கைப்பற்றப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டது. திருச்சியில் மகளிர் சுய உதவிக்குழு விழாவை அதிகாரிகள் நிறுத்தினார்கள்.

வேலூரில் அனுமதியின்றி தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்து இருந்த சேலை வழங்கும் விழாவை தேர்தல் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அங்கு விநியோகம் செய்ய வைத்திருந்த சேலைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். தொடர்ந்து தேர்தல் முடியும் வரை இந்த கெடு பிடியும், வாகன சோதனையும் நீடிக்கும். அரசியல் வாதிகள் மட்டும் அல்லாமல் வியாபாரிகளும் கலங்கிப் போய் உள்ளனர்.

No comments: