Mar 30, 2011

இரு ஆட்சியையும் ஒப்பிட்டு ஓட்டுப் போடுங்கள்!! கருணாநிதி!!

மார்ச்31 கோவை: "அ.தி.மு.க., ஆட்சியையும் தி.மு.க., ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து ஓட்டுப்போடுங்கள்,'' என்று முதல்வர் கருணாநிதி பேசினார்.

கோவை சிவானந்தா காலனியில் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது:இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்ற கேள்வியுடன், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உங்களிடம் உள்ளது.

இந்த கூட்டணியை அமைந்திருக்கும் முறையைப் பார்த்தாலே தெளிவு பறிக்கும்; நம்பிக்கை பிறக்கும். கடந்த தேர்தலில் கொங்கு மண்ணில் இழப்பை சந்திக்க நேர்ந்தது. கொங்கு சங்கத்தைச் சேர்க்காததால்தான் பெரிய தோல்வி என்று காரணம் கூறினார்கள்.

அதனால், இந்த முறை அவர்களையும் கூட்டணியில் இணைத்துள்ளோம். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த உறுதி நிச்சயம் காப்பாற்றப்படும் என்ற எண்ணம்,கோவையிலுள்ள மக்களைப் பார்த்ததும் தெரிந்தது.

கோவை நகரம், நான் அரசியலுக்காக வந்து போகும் இடமல்ல; என் வாழ்வில் இடம் பெற்ற முக்கியமான இடம். அரசியலில் அடியெடுத்து வைத்து 75 ஆண்டுகளுக்குப் பின், எனது 87வது வயதில் இன்று உங்களைச் சந்திக்கிறேன்.

இந்த சந்திப்பில், நிறைய மகிழ்ச்சியும், சோகமும் உண்டு.இந்த மண்ணில் என்னோடு வாழ்ந்த, பழகிய பல நண்பர்கள், தலைவர்கள் இன்று இல்லை. என்னைப் பொறுத்தவரை, கோவை என்பது தி.மு.க.,வின் கோட்டை; என்னைத் தாலாட்டிய தொட்டில்; நான் விளையாடிய தாழ்வாரம்.

கலை உலகுக்கு அடித்தளம் அமைக்க துணை புரிந்த பகுதி என்ற உணர்வுடன்தான் நான் உங்களை சந்திக்கிறேன். 1945க்கு முன் நானும், எம்.ஜி.ஆரும் இதே ஊரில்தான் ஒரே வீட்டில் குடியிருந்தோம்.

கோவையில் செம்மொழி மாநாடு இங்குதான் நடந்தது. திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக் கூட தமிழ்த்தாய் வாழ்த்தாக தான் இருந்தது. எவரையும் புகழ்ந்து பாட இடம் தரவில்லை. அவர்கள் நடத்திய தஞ்சை மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஜெயலலிதா வாழ்த்தாக வாசித்தார்கள்.

பால் உற்பத்தியை பெருக்க, கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிச்சயமாக நிறைவேற்ற அரசு ஆவண செய்யும். தென்னை விவசாயத்தை ஊக்கப்படுத்த, உயர்ரக கன்றுகள் மானிய விலையில், வழங்கப்படும். அதற்கான உதவிகளை இன்னொரு தேர்தல் அறிக்கையாக அறிவிக்கிறேன்.

திருப்பூர் சாயக் கழிவு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழக அரசு எடுத்த முயற்சிகள் கோர்ட் நடவடிக்கையால் தாமதப்படுகின்றன. மத்திய அரசின் ஒத்துழைப்பை பெற்று, தமிழக அமைச்சர்களை கூட்டி சிக்கல்களை ஆராய்ந்து, விரைவில் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் வட்டியை அறவே தள்ளுபடி செய்வோம். சூரிய ஒளி, காற்றாலை மூலம் மின்சாரம் ஊக்கத் தொகை வழங்க பரிசீலிக்கப்படும். இன்று தமிழகத்தில் மின்சாரத்தை நம்பி பல தொழில்கள் உள்ளன.

உற்பத்தி ஆகும் மின்சாரம் போதுமானதாக இல்லை. ஆகவே எதிர்பாராத சிரமங்கள் ஏற்படுகின்றன. ஜெயலலிதா ஆட்சியில் புதிய மின் உற்பத்தி திட்டங்கள் எதுவும் ஆரம்பிக்கவில்லை. அதனால் இன்று நாம் கஷ்டப்படுகிறோம்.

இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் பக்கத்து மாநிலங்களுக்கும் வழஙகும் அளவுக்கு தமிழகத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.அ.தி.மு.க., ஆட்சியில் சாதாரண மக்கள் வாழ முடியவில்லை. அரசு ஊழியர்கள் சிறையில் இருந்தார்கள்.

ஆசிரியர்கள் அடிபட்டனர்; உதைபட்டனர். எதிர்க்கட்சி தலைவராக இருந்த என்னையே சிறையிலே பூட்டி அடித்து உதைத்து வெளியே அனுப்பினர். இன்று அவர்கள் உங்கள் ஓட்டுகளை வாங்க உத்தமி வேடம் போடுகிறார்.

அ.தி.மு.க., ஆட்சியையும் தி.மு.க., ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து ஓட்டுப்போடுங்கள். இவ்வாறு, கருணாநிதி பேசினார். ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கட்சியின் மூத்த நிர்வாகி ராமநாதன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

No comments: