Apr 8, 2011

தானே இறைவன்!! சாயிபாபாவும் அவரது அற்புதங்களும்!!

ஏப்ரல் 8, புட்டபர்த்தி : 1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் பிறந்த இவர் தனது 13ஆம் வயதில் மந்திர தந்திர சக்திகளை காட்டத் துவங்கினார். பூக்களை வரவழைப்பது, இனிப்புகளை வரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம்.

தன்னை சீரடி சாயிபாபாவின் மறு உருவம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும் சொல்லிக்கொண்டார், அதனை நிரூபிப்பதற்காக பூக்களை தரையில் வீசினாராம்.

வீசிய பூக்கள் தெலுங்கு எழுத்துகளாக மாறி, அவற்றை படித்தபோது சாயிபாபா என்று இருந்ததாம். இதனை அவரது பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி அவைகள் நட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு முதல் உலக மொழிகள் அனைத்திலும் சாயிபாபா என்று தென்பட்டதாக அடித்து விட்டிருக்கலாம்.

இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள் உண்டு. பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு. 1950ய-இல் சிறு ஆசிரமமாக தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம் இன்று ஒரு சிறு நகரமாக வளர்ந்து நிற்கிறது.

பல நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி, பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாயிபாபாவின் பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக வளர்ந்திருக்கிறது.”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”

இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் சத்ய சாயிபாபாதான்.வானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம்.

ஆனால், செயலிழந்து விட்ட அவரது சிறுநீரகங்களையும் நுரையீரலையும் பழைய நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும் முதுகுதண்டு வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்தியவர்’ சாயிபாபா.

உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில் சென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னுடம்பை தானே குணப்படுத்திக் கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அவரோ மருத்துவத்தின் அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.
சாயிபாபாவை பற்றி பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார்.

இவை எல்லாரும் ஒரு சில பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…

அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர். வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா வெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு செல்வாக்குண்டு.

1 comment:

Lakshmi said...

நம்பிக்கை அவரவர் மனனிலையைப்பொறுத்தது
நமக்கு நம்பிக்கை இல்லை ஒதுங்கி போய்விடுவது நல்லது. விமர்சன்ம் வேண்டாமே.