Jul 13, 2014

ஈழ தமிழ், முஸ்லீம் மக்கள் இணைந்து செயல்பட வேண்டும்!

ஜூலை 13/14: கடந்த சில வாரங்களுக்கு முன்  தென்னிலங்கையில் மிகத் திட்டமிட்டு அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனகலவரம் இன்றைய தினத்தில் மத்திய பகுதியான பதுளை போன்ற நகரங்களிலும் முஸ்லீம் மக்களின் பாதுகாப்பினை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திர குமரன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.  
சிறீலங்காவின் மேல் மாகாணத்தில் உள்ள களுத்துறை மாவட்டத்தில் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் அளுத்கமை, தர்க்காநகர் ஆகிய பகுதிகளில் பௌத்த பல சேனாவின் நேரடி நெறிப்படுத்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ள முஸ்லீம்களுக்கு எதிரான வன்செயல்களையும் அப்பாவி முஸ்லீம் மக்களின் வழிபாட்டுத் தலங்கள், பொருளாதார மையங்கள், குடியிருப்புக்கள் எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டு அவர்களை அவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முயல்வதும் சிங்கள பௌத்த மேலாதிக்க அரசின் குறிக்கோளின் ஒரு பகுதியாகவும் 1983இல் தமிழ்மக்களுக்கு எதிரான இனவெறி வன்செயலின் தொடர்ச்சியாகவுமே விளங்க முடிகிறது. 
இத்தகைய இனவழிப்பு செயற்பாடுகள் தொடர்வதனையும் தமிழ்மக்களைத் தொடர்ந்து முஸ்லீம் மக்களும் சிறிலங்காவின் இனவழிப்பு திட்டத்திற்கு பலிக்கடாக்களாக்கப்படும் அபாயம் வெளிப்படுவதையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மிகவன்மையாகக் கண்டிப்பதோடு பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்திலும் பங்கேற்கிறது. இவற்றினைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் தமிழ் மொழிபேசும் மக்கள் என்ற குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பாக வேண்டி நிற்கின்றேன் என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திர குமாரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.  
நாடு கடந்த தமிழீழ அரசு என்றால் என்ன?
நாடு கடந்த அரசாங்கம் என்பது, அரசியலில் ஈடுபடும் ஒரு குழுவினர், சொந்த நாட்டில் தவிர்க்கமுடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசாங்கம் ஒன்றை நிறுவுவதாகும். காலப் போக்கில் இந்த அரசானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று சக்திகளையும் அதிகாரங்களையும் மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவது ஆகும். 
இரண்டாம் உலகப் போரில் பல ஜரோப்பிய நாடுகளை கிட்லரின் நாசிசப் படைகள் கைப்பற்றியதனால், பல ஜரோப்பிய நாடுகள் பிரித்தானியாவில், இவ்வாறான நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை நடத்தி வந்திருந்தனர். ஆகையால் அவர்கள் தேசியம் காப்பாற்றப்பட்டது. 
திபெத்திய பீட பூமியை சீன அரசு ஆக்கிரமிப்புச் செய்தபோது அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா இந்தியாவுக்குச் சென்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடாத்தி வருகிறார். தற்போது சுமார் 11க்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் உலகில் இயங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு கடந்த அரசாங்கத்தால்  என்ன செய்ய முடியும்: 
* சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது.
* தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுப்பது.
*தேசியத்தின் சட்ட முறைமைகளைப் பாதுகாப்பது.
* ஒரு தேசிய இராணுவத்தை காப்பது அல்லது கட்டி எழுப்புவது.
* அரசியல் ரீதியாக அல்லது இராஜதந்திர ரீதியாக நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்துதல்.
* தேசிய அடையாள அட்டை வழங்குவது
* ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளை உருவாக்குவது.
* தேர்தல்களை நடத்துவது.
என்பனவற்றை நாடுகடந்த அரசாங்கத்தால் செயல்படுத்த முடியும்

நாடு கடந்த அரசாங்கத்தினை உருவாக்கத் தேவையானவை:
நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க, ஏதாவது ஒரு வெளிநாட்டின் அனுமதி அல்லது முழு அங்கிகாரம் தேவைப்படுகிறது. அந்த நாட்டிலேயே நாடு கடந்த அரசாங்கத்தை நடத்த முடியும்,  அந்த அடிப்படையில் தமிழீழ நாடுகடந்த அரசு அமெரிக்க அரசின் அனுமதி பெற்று அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் செயல்பட்டு வருகிறது. 

நாடு கடந்த அரசாங்கத்தால் என்ன பயன் :
பல வெளிநாடுகளில் தமது அரசின் உத்தியோக பூர்வ தூதுவர்களை நியமிக்க முடியும், வெளிநாட்டு அரசாங்கங்களுடன், ஒரு நாட்டு அரசாங்கம் போல தகுதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடமுடியும், குறிப்பிட்ட நாட்டுடன் தனது பிணக்குகள் குறித்து பேச்சுவார்தை நடத்தி தீர்வுகான ஏதுவாக இருக்கும். இவ்வாறு பல உரிமைகள் இந்த நாடு கடந்த அரசாங்கத்திற்கு உண்டு.

*சிங்கள பேரினவாதம் முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் ஐயம் இல்லை என்று நம்புவோம்*

No comments: