Dec 11, 2015

நீ “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்!

“நான்” என்ற சொல்லை நீங்களும், நானும், எல்லோரும் மிகச் சுலபமாக ஒரு நாளைக்கு நூறுதரங்களிற்கு மேல் பயன்படுத்தி வருகிறோம். “நான்” என்பதனைப் பற்றி சிந்தித்து பார்த்திருக்கிறீர்களா ஒரு தடவை. “நான்” என்பது என்ன? கண்ணாடியில் தெரியும் முகமா, அல்லது எம்மிடம் இருக்கும் புகைப்டத்தில் இருக்கும் முகமா, கதவில் எழுதிய பெயரா, அல்லது வேறா ? என் எதிரே “நான்” வந்தால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா? நான் யார்? 

தந்தையை வருவதை பார்த்து சிகரட்டை முகுகுக்கு பின்னால் ஒளித்து வைத்துக் கொள்பவனா? தலை சீவும் போது கண்ணாடியில் ரசிக்கும் அவனா? பாதையில் செல்லும் வசீகரமான பெண்ணை திரும்பி திரும்பி பார்ப்பவனா? இறைவனிடம் கண்ணீர் சிந்தி பிரார்த்திப்பவனா?, பாடல்களை ரசிப்பவனா? குத்து பாட்டுக்கு மனசில் ஆட்டம் போடுபவனா? விதவிதமாக உணவை சுவைப்பவனா? காதலியுடன் பேசி பேசி காலம் கடத்துபவனா? இந்த பட்டியல் நீளமானது.

நான் என்பது யார்? என் அடையாளம் தான் எ்னன? என் சுயம் தான் என்ன? என் சுயத்தை என்றாவது தேடியிருக்கிறேனா? அதை பார்த்து அதிர்ந்திருக்கிறேனா அல்லது சிரித்திருக்கிறேனா? இந்த அடையாளம் என்பதனை உடலாக, முகமாக, பழக்கமாக, எழு்த்தாக, பேச்சாக, செயலாக, சிந்தனையாக, பழகும் விதமாக பிரித்துப் பார்த்தால் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு முகம் உள்ளது தெரிய வரும். அப்படியென்றால் பல முகங்களில் எனது நிஜ முகம் எது? இந்த கேள்வி கேட்கப்படாதவரை பலர் இயந்திரமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு விடை காண்பவர்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பார்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருப்பார்கள். நம்மை நாமே அடையாளம் கண்டு கொள்ளல் வாழ்க்கையை சுவைப்படுத்தும், செழுமைப்படுத்தும்.

நாம் நம்மை அடையாளம் கண்டு கொள்வதன் முதல் கட்டமாக நம் அணுகுமுறை, செயல்முறை, சிந்தனை ஓட்டத்தின் தன்மை ஆகியவற்றினை நன்கு பரிசீலனை செய்ய வேண்டும். நேற்றின் கசப்பான பாடங்களில் இருந்து இதுவரை காலமும் நான் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை என்று உணர்ந்து கொள்வதும் நம் அடையாளத்தை நமக்கு நன்கு காட்டும். தனியான குளியலறையில் நம் நிர்வாணம் நம்மை அவமானப்படுத்தாது. அதே போல சுய பரிசீலணையில் நாம் வெட்கப்பட ஒன்றுமேயில்லை. நம்மிடம் நாம் பொய் சொல்லாதவரை, சாக்கு போக்கு சொல்லாதவரை, காரணங்களை குழப்பிக்கொள்ளாதவரை நாம் நம்மை அடையாளம் கண்டு கொள்ள முடியும். நேற்றின் தாக்கத்தினை அறிந்து கொள்வதன் ஊடாக அதில் தேவைாயான படிப்பினைகளை உள்வாங்குவது எம்மை நாமே இனங்காண துணைநிற்கும்.

தனிமை, தனிமையில் தியானம் (மெடிடேசனல் மூட்) என்பன மனதை அல்ஃபா நிலைக்கு கொண்டு செல்லும். முகம்மது நபி (ஸல்) அவர்கள் இதனைத்தான் ஹிராக்குகையில் செய்தார்கள். ஒரு நாள் இரு நாள் அல்ல, வாரக்கணக்காய் தனிமையில் உண்மையை தேடினார்கள். அவரது நபித்துவம் கூட அன்னை கதீஜாவின் வீட்டினிலோ அல்லது மக்காவின் சந்தையிலோ வைத்து வழங்கப்படவில்லை. மாறாக தன்னை தேடும் அந்த ஆன்மீக பயணத்திலேயே கிடைத்தது. “நான் யார்” என்பதே என்னை பொருத்தவரை மில்லியன் டொலர் கேள்வி. டி.எம்.எஸ்.-ன் குரலில் கண்ணதாசன் எழுதிய அந்த அற்புதமான காவிய வரிகள் இது : “உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.

நன்றி : Abu Maslama ( கைபர்தளம்).
*மலர் விழி*

1 comment:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்