Mar 4, 2016

ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!

1). பேராசிரியர் சிவக்குமார்: ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இந்துத்துவம் என்ற வார்த்தைக்கு பதிலாக தேசியம் என்ற வார்த்தையை பயன்படுத்தி பிரச்சனைகளை உண்டு பண்ணிக் கொண்டிருக்கிறது.

2). வழக்குரைஞர் ராஜூ (மக்கள் அதிகாரம் அமைப்பு): இது அறிவியலுக்கும் அறிவற்ற அடிமுட்டாளுக்கும் இடையில் நடைபெறும் யுத்தம் என குறிப்பிட்டார். மேலும் மாங்காய் திருட செல்லும் குரங்கு, கூட்டமாக சென்று மாங்காய் திருடும்போது செய்யும் அட்டகாசத்தால் தோட்டக்காரன் விழிப்படைந்து அதை அடித்து விரட்டிவிடுவான். உடனே அடுத்த தோட்டத்திற்கு இந்த குரங்கு செல்லும். அங்கும் தோட்டக்காரனால் அடித்து விரட்டப்படும். 

பின்னர் அனைவரும் இந்த குரங்கை கண்டறிந்து ஒட்டு மொத்தமாக அடித்து துரத்துவர். அதுபோல் சென்னை ஐ.ஐ.டி-யில் வாலாட்டிய பார்ப்பனிய குரங்கு, இங்கு அடித்து விரட்டப்பட்டு ஐதராபாத் சென்றது. அங்கும் விரட்டப்பட்டு இப்போது டெல்லி சென்றுள்ளது. இனி ஒட்டு மொத்தமாக அனைவரும் சேர்ந்து அதனை விரட்ட வேண்டிய காலம் வந்து விட்டது என் தெரிவித்தார். மேலும் நீதிமன்றங்களில் நீதிபதிகள் எப்படி நாட்டாமைகள் போல் நடந்து கொள்கின்றனர் என்பதை விளக்கினார்

3). தோழர் மருதைய்யன் (ம.க.இ.க பொதுச்செயலாளர்): ஜெ.என்.யூ மாணவர் தலைவர் கண்ணையா குமாருக்கு பிணை வழங்கிய நீதிபதி தன் தீர்ப்பில் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரை போலவே தீர்ப்பு சொல்லியிருப்பதை அம்பலப்படுத்தினார். ஜெ.என்.யூ வை ஒரு கிருமி தாக்கியிருப்பதாகவும் அது பரவுவதற்குள் அதற்கு நோய் தடுப்பு மருந்து கொடுக்கப்படவேண்டுமெனவும், அதைத் தாண்டி போனால் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமெனவும் தெரிவித்திருக்கிறார். முழுக்க பொய்களாலும், மோசடியாலும் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த வழக்கில் நிபந்தனை பிணை வழங்கும்போதே குற்றத்தை உறுதிப்படுத்திவிட்டார் அந்த நீதிபதி என்றார்.

மேலும் சியாச்சின் பனிச்சரிவில் உயிரிழந்து போன ராணுவ வீரர்களின் உடலை கொண்டுவந்து வைத்து இதற்கு என்ன பதில் சொல்லுகிறீர்கள்? என ஜெ.என்.யூ மாணவர்களை பார்த்து கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்? அவர்களை அங்கு அனுப்பியவர்களைத்தானே கேள்வி எழுப்ப வேண்டும். 1947-க்கு பிறகே காஷ்மீர், மணிப்பூர், சிக்கிம் போன்ற மாநிலங்கள் வலுக் கட்டாயமாக இணைக்கப்பட்டன. இன்றும் அதனை ‘தேசபக்தி’ என்ற பெயரில் ராணுவத்தைக் கொண்டு இருத்தி வைப்பதற்காக இது போன்று சியாச்சின் பகுதிகளில் ராணுவ வீரர்களை பலிகொடுக்கிறது இந்த அரசு. உண்மையில் தேசவெறி என்ற பெயரில் இந்துவெறி ஊட்டப்பட்டு முசுலீம்கள், தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்படுகின்றனர். அதே தேசவெறிக்குத்தான் அப்சல் குரு பலியிடப்பட்டார். அதே தேசவெறி – இந்துவெறி ஊட்டப்பட்டுத்தான் மாட்டுக்கறி வைத்திருந்ததாக வதந்தி பரப்பப்பட்டு ஒரு முஸ்லிம் முதியவர் அடித்தே கொல்லப்பட்டார்  என்றார்.

உணமையில் எது தேசவிரோதம்? இராமநாதபுரத்தில் பாதியை அதானிக்கு எழுதிக் கொடுத்துள்ளனர். தேயிலைத்தோட்டங்களை டாடாவுக்கு இன்னும் பல்வேறு கனிம வளம் நிறைந்த பகுதிகளை பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டுள்ளதே இதுதான் தேசத்துரோகம் என பேசினார்.

No comments: