Jul 28, 2010

அடங்கமாட்டியா நித்தியானந்தா? மீண்டும் ஹிந்து சாமியார் நித்தி.

வெட்கம், மானம், சூடு, சொரணை முதலியவைகள் இருந்திருந்தால் நித்தி தனது தவறை நினைத்து மனம் வருந்தியிருப்பார். சாமியார் வாழ்வை விட்டு விலகுவதாக அறிவித்திருப்பார். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதோடு சாமியார் முன்னை விட மும்மூரமாக வேலைகளை ஆரம்பித்துவிட்டார். ரஞ்சிதாவும் வெளியான வீடியோ பொய்யானது என்று கூறிவிட்டார்.

எடியூரப்பா மற்றும் பா.ஜ.கவின் இந்துத்வ ஆதரவோடு, மிகுந்த பணபலத்தோடும் நித்தி இந்த பாலியல் ஊழல் முறைகேட்டை பத்தோடு ஒன்றாக கருதிவிட்டு ஆசிர்வாத லீலைகளை ஆரம்பித்து விட்டார். ஆக செய்த தவறு இம்மியளவும் இந்த மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பதற்கும் அவர் மேட்டுக்குடி பொறுக்கி சாமியார் என்ற பௌதீக நிலைதான் காரணம். இதை இனியாவது அண்ணன் தமிழ்ச்செல்வன் புரிந்து கொள்வாரா?

நித்தியை விடுங்கள், இந்த பக்தர்களை எதைக் கொண்டு அடிப்பது? இந்தக் கண்றாவி சாமியாரை பல்லக்கில் சுமந்து வருகிறார்கள் என்றால் யாரிடம் சொல்லி அழ? சாமியார் யாகம் செய்வாராம், பக்தர்கள் நடனம் ஆடுவார்களாம், சாமியாரின் காலில் விழுவார்களாம், இறுதியாக நித்தி சொற்பொழிவு ஆற்றுவராம். எதுவும் நடக்காதது போல பக்தர்கள் இப்படி அடி முட்டாள்களாக இருப்பதுதானே நித்தி இப்படி கூச்ச நாச்சமில்லாமல் ஆட்டம் போட வைக்கிறது?

இவர்களை அடிமுட்டாள்கள் என்பதை விட ஊழலெல்லாம் வாழ்வில் சகஜம்தான் என்று ஊழல்படுத்தப்பட்ட சிந்தனைக்கு அடிமையானவர்கள் என்றும் சொல்லலாம். இவர்கள் கொடுக்கும் தைரியத்தில்தான் நித்தி தன்னை காமசாமியார் என்று அழைப்பதைப் பொருட்படுத்தவில்லை என்கிறார். இதில் ராமகிருஷ்ணரை எதற்கு ஒப்பிடுகிறார்? அவருக்கு சாரதா தேவி என்ற மனைவியும், அந்த மனைவியை காளியின் அவதாரமாய் அவர் பூஜை செய்வதும், ரஞ்சிதாவை பூஜை செய்த நித்திக்கு பொருத்தமாக இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

மேலும் விவேகானந்தர் ஆரம்பித்த ராமகிருஷ்ண மடம் துவங்கி எல்லா மடத்திலும் செக்ஸ் முறைகேடுகள் வழமையாக மாறிக் கொண்டிருக்கும் போது அந்த மடத்து சீடர்களும் நித்தி இப்படி ஒப்பீடு செய்வதை எதிர்க்க முடியாது. இதில் நித்திக்கு இன்னும் ஆன்மீக பவர் போகவில்லையாம். அவர் சொன்னபடி ஒரு கைதிக்கு ஜாமீன் கிடைத்து விட்டதாம். ஜெயலலிதா கூட தனது வழக்குகளிலிருந்து விடுதலை அடைவதற்கு நித்தியைப் பார்க்கலாமே? எடியூரப்பாவிடம் சொன்னால் ஒரு அப்பாயிண்ட்மெண்ட வாங்கிக் கொடுத்து விடுவார். இப்போது நித்தி கூட பிரச்சினையில்லை. ஆனால் ஊரறிந்த சாமியார் அதே ஊரறிய ஒரு செக்ஸ் மோசடியில் சிக்கிய பிறகும் அவரது ஆன்மீக சாம்ராஜ்ஜியம் எந்தத் தடையுமில்லாமல் நடைபெறுகிறதே அதுதான் பிரச்சினை.

No comments: