Nov 1, 2010

தீபாவளி குறித்து 1929-இல் பெரியார் கூறியவை.


இனி அடுத்த மாதம் தீபாவளி பண்டிகை என்று கஷ்டமும் நஷ்டமும் கொடுக்கத்தக்க பண்டிகையொன்று வரப்போகின்றது. அதிலும் ஏதாவது, அறிவுடைமை உண்டா என்று கேட்கின்றேன். தீபாவளி பண்டிகையின் கதையும் மிக்க ஆபாசமானதும், இழிவானதும், காட்டுமிராண்டித்தனமானது மாகும், அதாவது விஷ்ணு என்னும் கடவுள் பன்றி உருக்கொண்டு பூமியைப் புணர்ந்ததன் மூலம் பெறப்பட்டவனான நரகாசூரன் என்பவன் வருணனுடைய குடையைப்பிடுங்கிக் கொண்டதால் விஷ்ணு கடவுள் கிருஷ்ணாவதாரத்தில் கொன்றாராம். அந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு அறிகுறியாக தீபாவளி பண்டிகை கொண்டாடுவதாம்.

சகோதரி சகோதரர்களே! இதில் ஏதாவது புத்தியோ மனிதத் தன்மையோ இருக்கின்றதா என்று பாருங்கள். விஷ்ணு என்னும் கடவுள் பூமியை புணருவது என்றால் என்ன என்றாவது, அது எப்படி என்றாவது, நரகாசூரன் என்றால் என்ன? வருணன் என்றால் என்ன? வருணன் குடை என்றால் என்ன? என்பதாவது, அப்படி ஒன்று இருக்க முடியுமா என்றாவது, இவைகள் உண்மையா? என்றாவது கருதிப் பாருங்கள்! இப்படி பொய்யானதும் அர்த்தமற்றதுமான பண்டிகையினால் எவ்வளவு கஷ்டம்? எவ்வளவு ரூபா நஷ்டம்? எவ்வளவு கடன்? எவ்வளவு மனஸ்தாபம்? எவ்வளவு பிரயாணச் செலவு? என்பவைகளை ஒரு சிறிதுகூட நமது மக்கள் கவனிப்பதில்லையே! அப்பண்டிகையை உத்தேசித்து ஒவ்வொருவரும் தனது யோக்கியதைக்கும் தேவைக்கும் மேற்பட்ட பணம் செலவு செய்து, துணி வாங்க ஆசைப்படுகிறான்;

கடன் என்றால் வட்டி அல்லது ஒன்றுக்கு ஒன்றரை பங்கு கிரையம் ஏற்பட்டுவிடுகின்றன. இதுதவிர மாமனார் வீட்டு செலவு எவ்வளவு. தவிர சுத்தமுட்டாள் தனமான பட்டாசுக் கொளுத்துவது எவ்வளவு? மற்றும் இதனால் பலவித நெருப்பு உபாதை ஏற்பட்டு வீடு வேகுதலும், துணியில் நெருப்பு பிடித்து உயிர் போதலும்,பட்டாசு சுடுவதாலும் செய்வதாலும் மருந்து வெடித்து உடல் கருகி கண், மூக்கு, கை, கால், ஊமையாவதுமான காரியங்கள் எவ்வளவு நடக்கின்றது? இவ்வளவும் அல்லாமல் இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு அறிகுறியாக எவ்வளவு பேர்கள் கள்ளு சாராயம் குடித்து மயங்கி தெருவில் விழுந்து புரண்டு, மானம் கெடுவது எவ்வளவு? மேலும் இதற்காக ‘இனாம் இனாம்’ என்று எத்தனை பாமர மக்கள் பிச்சை எடுப்பது அல்லது தொந்தரவு கொடுத்து பணம் வசூல் செய்வது ஆகிய இந்தக் காரியங்களால் எவ்வளவு பணம், எவ்வளவு நேரம், எவ்வளவு ஊக்கம், எவ்வளவு பணம் செலவாகின்றது என்று கணக்குப் பாருங்கள். இவைகளை எல்லாம் எந்த இந்திய பொருளாதார தேசீய நிபுணர்களாவது கவனிக்கிறார்களா? என்று கேழ்க்கின்றேன்.

துலாஸ் தானம் தவிரவும் இந்து மதத்திலேயே அய்ப்பசி துலாஸ்நானமென்று புதுத் தண்ணீர் காலத்தில் நதிகளில் போய் அழுக்குத் தண்ணீரில் தினம் தினம் காலையில் குளிப்பதும், புதுத்தண்ணீர் ஒத்துக் கொள்ளாமல் கஷ்டப்படுவதும் இதற்காக ஊரைவிட்டுவிட்டு ஊர் பணம் செலவு செய்து கொண்டு போய் கஷ்டப்படுவதும். ஒன்று இரண்டு தண்ணீர் இழுத்து கொண்டு போகப்படுவதும், குளித்து முழுகிவிட்டு நதிக்கரையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு அரிசி பருப்பு பணம் காசு கொடுத்து அவன் காலில் விழுவதுமான காரியங்கள் செய்வதும், ஆதிமுதல் அந்தம் வரை அத்தனையும் பொய்யும் ஆபாசமுமான காவிரிப்புராணம் படிக்க கேட்பதும் அதற்காக அந்த பொய்யையும் கேட்டு விட்டு பார்ப்பானுக்கு சீலை வேஷ்டி சாமான் பணம் கொடுத்து காலில் விழுவது மான காரியம் செய்கின்றோம். காவேரியை பெண் தெய்வமென்பதும் அதில் ஆண்கள் குளிப்பதுமான காரியம் ஆபாசமல்லவா?

ஈ.வெ.ரா. [பெரியார், ´குடி அரசு´, - சொற்பொழிவு - 20.10.1929

No comments: