Mar 19, 2011

எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி!!

இது மக்கள் விழிப்புணர்வுக்காகவே வெளியிடப் படுகிறது. ஆளும் கட்சிக்கு எதிராகவோ அல்லது எதிர்கட்சிகளுக்கு ஆதரவாகவோ அல்ல. அரசியலில் ஈடுபடும் அனைவருமே ஏதாவது ஒருவகையில் மக்களை ஏமாற்றுபவர்கள்தான். எரிகிற கொள்ளியில் பிடுங்குற மட்டும் லாபம் என்ற மனப்பான்மையை அனைவரும் கொண்டிருக்கிறார்கள்.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அரசு ஊழியர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில், அரசியல் சட்டம் ஒன்றை, பீகார் மாநில அரசு இயற்றியுள்ளது. அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் இதுபோன்ற சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது, இந்திய குடிமக்களின் விருப்பம். ஆங்கிலேயர்கள் கொள்ளை அடித்துச் சென்ற தொகை, 900 கோடி ரூபாய் மட்டுமே.

இன்றைய மதிப்பில், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம். ஆனால், சுதந்திரம் பெற்ற பின், அரசியலை தொழிலாக மாற்றி, நம்மவர்கள் கொள்ளையடித்த தொகை, வெளிநாடுகளில் மட்டும், 70 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணமாக பதுங்கியுள்ளது. உள்நாட்டில், பினாமி பெயர்களில் உள்ள சொத்துக்களின் மதிப்பு, 70 லட்சம் கோடியையும் மிஞ்சும்.

கேரள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளைக்கு, ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிப்பதுடன், அரசியல்வாதிகள் வீட்டில் பணிபுரிபவர்களின் பெயரிலுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்தால், ஊழல் செய்யவே அஞ்சும் நிலை ஏற்படும். ராஜாவின் அண்ணன், தம்பி, நண்பர் அனைவரும், ஒரே வருடத்தில், கோடீஸ்வரர்களாகியுள்ளனர்.

ஆனால், அவர்களின் பூர்வீக சொத்துக்களை கணக்கிட்டால், ஓடு மட்டுமே இருக்கும்; காலி பானை மட்டுமே இருக்கும். ஒரு ஊரில், ஒருவர் திடீர் பணக்காரர் ஆகிவிட்டால், அவர் அரசியல்வாதிக்கு உறவினராக இருப்பார். உள்நாடு, வெளிநாடுகளிலுள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் நிலை ஏற்பட்டால், அரசியல் கூவம் நிலை மாறி, கங்கை ஓடலாம்.

அதாவது டெண்டர் விட்டால் பத்தாயிரம் கம்பெனிகள் விண்ணப்பிக்கும். பத்தாயிரம் விண்ணப்பங்களில் சரியான கம்பெனிகளை தேர்வு செய்வது என்பது மிகவும் சிரமம் என்பதால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்று சொல்லிவிடலாம். அது மிகவும் சுலபம். வேலையும் எளிது என தீர்மானம் செய்துதான் அவ்வாறு டெண்டர் விட்டனர். அதன்படியே ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

இதனை கபில்சிபல் மட்டும்தான் சரியாக புரிந்துகொண்டு பாராட்டியிருக்கிறார். அதாவது முதலில் வந்தவனுக்கு முன்னுரிமை என்று கொடுத்ததால் அது தரமற்ற கம்பெனிகள் என்று ஆகிவிடாது டாடா, வோடஃபோன், ரிலையன்ஸ் போன்றவை சாதாரன கம்பெனிகளா என்ன? என ஒரு சரியான வாதத்தினை முன்வைத்திருந்தார்.

எனக்கு என்னமோ இவிங்க சொன்னதுதான் சரியென்று படுகிறது. இப்படியாக மெடிக்கல் சீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கும் அமுல்படுத்தினால் நன்றாக படித்தவர்கள் மட்டுமல்லாது படிக்காத மாணவர்களுக்கும் அது உதவியாக இருக்கும். இதனால் நிறைய ஏழை மாணவர்கள் டாக்டராகி எளிய மக்களுக்கும் சேவை செய்வார்கள். இப்படி முதலில் வருபவர்களில் படித்த நல்ல மாணவர்களும் இருக்கதானே செய்வார்கள்.

இப்ப சட்டசபைக்கு தேர்தல் நடக்குது இல்லையா! இதுலயும் கட்சி வேறுபாடு இல்லாமே முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தால் இப்ப எந்த கட்சிக்கு எவ்வளவு சீட் கொடுக்குறது அப்படிங்கிற பிரச்சினையே வராது பாருங்க!. நம்மலப்போல ஆட்களுக்கும் சீட் கிடைச்சா நாமலும் நாலு காசு பாத்து ஸ்கார்ப்பியோ காருல போகலாம் பாருங்க!. இப்படி முதல்ல வரும் ஆளுங்க இந்த விசயத்துலயாவது ஒரளவுக்கு தரமா வருவாங்க என்பது எவ்வளவு நிதர்சனமான உண்மை. ஏன்னா? இப்ப இருக்கிற எம்.எல்.ஏ பத்தி புதுசா வேற சொல்லனுமாக்கும்.

அதேமாதிரி, இப்ப பொண்ணுபாக்க போறோம். மொதல்ல பொண்ணுபாக்க வாரவனுக்கே கட்டிக் கொடுத்துட்டா பஜ்ஜிசொஜ்ஜி, டீ செலவெல்லாம் மிச்சம் பாருங்க! இப்படியாக நாம் அடுக்கிக்கொண்டே போகலாம்.. ஆனால் இவரை விட்டா இவரை விட மோசமான ஆள் வந்துட்டா என்ன பன்றது என்ற குழுப்பம்தான் நம்மை பாடா படுத்துதுதானே. என்ன செய்வது எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்பதுதான் நம்முன் இருக்கும் ஒரே கேள்வி???

No comments: