Mar 23, 2011

பகுத்தறிவா? அது ஏந்த கடையில் கிடைக்கும்!!

மார்ச் 24,: பகுத்தறிவு பகலவனாக பவனி வந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் மஞ்சள் துண்டின் மகிமையில் மனதை பறிகொடுத்த சம்பவம் அனைவரும் அறிந்ததே! பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் பாடம் பயின்றதாக படம் காண்பிக்கும் கலைஞர் வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக சென்னையில் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.

அவர் புறப்பட்ட பிரச்சார வேனுக்கு முன்னால் தேங்காய் உடைத்து ஆசிர்வாதித்துள்ளனர் அவரது கட்சியின் கொள்கை கோமான்கள். இதுக்குறித்து கேள்வி எழுப்பினால்,வட நாட்டிலிருந்து வந்த பிள்ளையாருக்கு உடைக்கும் தேங்காயை எனக்கு உடைத்தால் என்னவாம்? என கலைஞர் எதிர்கேள்வி கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முன்பு இவரது கட்சியின் அமைச்சர் ஒருவர் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் தீ மிதித்தபொழுது தனது காலையே மிதித்ததுபோல் துள்ளிக் குதித்தார் கலைஞர். காட்டுமிராண்டித்தனம் என கண்டித்தார். ஆனால்,கோவில் கும்பாபிஷேகங்களில் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்வது, வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்கள் பின்னால், தன் குடும்பத்தினர் சுற்றுவது இவற்றை எல்லாம் மறந்துவிட்டார், பகுத்தறிவு குறித்து அறிக்கை விடும் கலைஞர்.

பாசிச பா.ஜ.க பரிவாரத்தை பண்டாரங்கள், பரதேசிகள் என திட்டித் தீர்த்தவர்தாம் பின்னர் அவர்களோடு கூட்டணி வைத்தார். சர்ச்சைக்குரிய சாயிபாபவுடன் கூடிக்குலாவி கொஞ்சநஞ்ச பகுத்தறிவையும் பறிகொடுத்தார். சாயிபாபா கலைஞரை சந்தித்த வேளையில் அவர் கொடுத்த மந்திர மோதிரத்தை (இது ஒரு மோசடி என நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது வேறு விஷயம்) விரலில் அணிவதற்கு போட்டிப் போட்டார்களாம் கலைஞரின் போர்ப் படைத் தளபதிகள்.

தஞ்சை பெரிய கோவிலின் பிரதான வாசல் வழியாக ஆபத்து ஏற்படும் என்ற மூட நம்பிக்கையால் பின்வாசல் வழியாக சென்றவர். திருக்குவளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கலைஞர் பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றிய விளம்பரத்தில் எமதர்மன் வீசும் பாசக் கயிற்றை கலைஞர் தடுப்பது போன்ற படம் நாளிதழ்களில் விளம்பரமாக வந்தது. ஆர்.எஸ்.எஸ். ஸால் உருவாக்கப்பட்ட கிராமப் பூசாரிகள் சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தை வழங்கியவர் கலைஞர்.

பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தபொழுது அக்கட்சி இந்துத்துவாவை முன்னிறுத்தவில்லை என பேட்டியளித்தார். இவ்வாறு பகுத்தறிவுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமில்லை என தனது செயலால் பிரகடனப்படுத்தும் கலைஞர் பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாநாட்டில் பேசும் வேளையில், அரசியலைத் துறந்து பெரியார் வழியில் சமூக சீர்திருத்தத் தொண்டில் ஈடுபடுவதை நோக்கி என் மனம் அவாவுகிறது என்றார்.

உடனே, பலரும் பகுத்தறிவு பிரச்சாரம் தமிழகத்தில் சூடுபிடிக்கும் என கனவுக் கண்டனர். ஆனால், அவையெல்லாம் வெற்று வார்த்தைகளும், தனது கட்சியினரை ஏமாற்றும் தந்திரமும்தான் என்பதை நடுநிலையாளர்கள் புரிந்துக் கொண்டனர். ஆக மொத்தத்தில் கலைஞர் ஒரு கைத்தேர்ந்த அரசியல்வாதி.

தனிப்பட்ட ரீதியாக அவர் ஒரு கவிஞர், கதாசிரியர், வசன கர்த்தா. ஆனால், பகுத்தறிவிலிருந்து கலைஞர் பத்தடி தூரம் விலகியே உள்ளார். இன்னமும் கலைஞரிடம் பகுத்தறிவு இருக்கிறது என நம்புபவர் தி.க தலைவர் அய்யா கி.வீரமணி மட்டுமே. அடுத்து கலைஞர் ஆட்சிக்கு வருவதைப் பொறுத்து அய்யா வீரமணியின் நிலைப்பாடும் மாறலாம்.

1 comment:

விக்கி உலகம் said...

பின்னுங்க பின்னுங்க ஹிஹி!