May 31, 2011

நாங்கள் தொலைத்த மண் வாசணை.!

ஆகஸ்ட் 15 மட்டும்தாங்க உங்களுக்கு தாய்நாட்டு நெனப்புவரும் ,

தாயைவிட்டுப்பிரிஞ்ச பிள்ளைபோல எப்பவுமே எங்களுக்கு தாய்மண்நெனப்பிருக்கும்.

கைவீசிக்காலாற நடந்து..கிடைத்தவேலையில் கிடைக்கும்காசுக்கு கவலையில்லாம வாழ்ந்திருந்தோம்.

குழந்தையோட போற பொண்ணையும் கபடமில்லாமப்பாத்துச் சிரிப்போம் ,

"அங்கிளுக்கு பாய் சொல்லு.".அம்மாகுரலுக்கு கையசைக்கும் குழந்தைக்கு ஆசையா டாட்டா சொல்லுவோம்

"மச்சான் பச்சி சிக்கிட்டுபோல"  கிண்டலாய்கேட்டாலும்..  அந்தபொண்ணப்பாக்கும்போது , சிஸ்டர் சௌக்யமான்னு" சிநேகமாப் பேசிப்போவோம்..

"என்னடா தண்டங்களா" சித்தப்பா குரலுக்கு சிகரெட்ட மறைச்சுவெச்சோம்

"உனக்குபிடிக்குமேன்னு ஆசையா வாங்கிவந்தேன்" கால்கிலோ திராட்சையைகையில்தந்து அம்மாமுகம் பாத்துச் சிரிச்சோம் ..

பட்டணத்தில் பூதம்போல சென்ட்டு மனக்கவந்த பக்கத்துவீட்டுக்காரனால வந்ததுங்க ஃபாரின்மோகம்

கைக்காசு கடங்காசு எல்லாஞ்சேத்து வந்துசெந்தோம் வளைகுடா !!
பணஞ்சேத்தோம்..வீடுகட்டுனோம்...ஆனா வாழ்க்கையே போச்சுடா !

"ஃபாரின் மாப்பிள்ளையாம்" தாராளமாய் பொண்ணுகிடைக்க 30 நாள் லீவில் 15ம் நாள் கல்யாணம் !

விடுமுறை முடிஞ்சு விட்டுவந்து வருஷம்ரெண்டாச்சு..போனில்வாழ அவளும் பழகியாச்சு.. பொண்டாட்டி கைப்பிடிச்சு பூவாங்கித்தாறபோல கனவு,

அலாரம் அடிக்க முழிச்சுப்பாத்தேன்..சாயங்காலம் 4 மணி...6 மணிடூட்டிக்கு இப்பவேகெளம்பனும் ..

ஆமா பகல்கனவு பலிக்குமாங்க? , பகலிரவு இரவுபகல்ன்னு எங்க கனவுகளும் காலம்மாறி நாளாச்சு.

சொற்பதிர்ஹத்துக்கு ஸ்பைடர்மேன் உத்தியோகம்! 60 வது மாடியில தொங்கறஅவஸ்தைய வேற எப்படிசொல்ல?

படிச்சவன்பாடும் அப்படித்தான்..கம்ப்யூட்டர கட்டியழுது குறுக்கொடிஞ்சு போயிருக்கான் !

பத்மநாபன் பையனுக்கு பர்த்டேவாம்.., பர்துபாய் கோயிலுக்கு போய்வந்தோம் ,சிவனும் சின்னக்கண்ணனும், சிங்கு குருத்துவாராவும்.. ஒரே கூறையில ஒட்டுக்குடித்தனம் எங்களைப்போலவே !!

தீவாளிக்கு தோசையும்,  ரம்ஜானுக்கு பிரியாணியும்,  ஓணத்துக்கு சாம்பாரும்

இன்னும் பேர்தெரியாத பிலிப்பைன்சு பண்டிகையும் பிரமாதமாக்கொண்டாடுவோம் வெள்ளிக்கிழமையில!!!!

அதான் அருமையாச்சொல்வீங்களே க்ளோபலைசேஷன் !

"ஏங்க தம்பிக்கு விசா எப்பக்கிடைக்கும் ?" அக்காளை அரித்தெடுத்து போனவாரம் விசா கிடைத்து வந்தமச்சான்.

எந்தலைக்குமேல பங்க்குபெட்டில் படுத்தபடி ஃபரீதாவோட பேசிக்கிட்டிருக்கான் (போன மாசம்தான் கல்யாணமாச்சு)

" ஊருதான் நல்லதுன்னு மாமா சொல்லியும் கேக்கல , வந்தாச்சு..வந்தகடன் தீரும்வரை வேறவழியில்ல"

வந்தகடன் தீருமுன்ன வேறொன்னு வருமுன்னு பாவம் அவனுக்குதெரியல்ல !!

வந்துட்டோம் ...வாழுறோம்.."அத்தா என்றான் , அணைத்துமுத்தமிட்டேன் கைப்பேசியை" கவிதைஎழுதுவோம்..

கண்ணீரைத்துடைக்க சுரத்தின்றி .நாலுவரியோட முடிக்கத்தான் நெனைச்சேன், என்னசெய்ய எங்ககூட்டம் பெரிசாச்சே !!

அன்வரோட அக்காபையனுக்கு விசா வேணுமாம் , வாங்க வாங்க ..வேணான்னுசொன்னா கேக்கவாபோறீங்க ??

கதைசொல்லிகள் : கல்ஃப் வாழிகள் ( அதான் EXPATS )
கதைகேட்டவர் ; ...யாழினி...

2 comments:

Lakshmi said...

மனத்தை உருக்கும் பதிவு. வெளி நாடு வாழ் மனிதர்களின் மன உணர்வு அப்படியே பிரதி பலித்திருக்கிரீர்கள்.என்ன சொல்லன்னு தெரியலே.

Anonymous said...

யாழினி என்ன இது? நிசமே பேசியது. நீங்கள் பேசவில்லை. 21 வயதில் கடல் தாண்ட பழகியவன். இன்று 51 வயது தாத்தாவாகி கண்டம் தாண்டி பழகி கிழவனாகிவிட்டேன். இன்னும் ஓயவில்லை பயணம். தேவைகளும்தான்.

- MOHAMED THAMEEM