May 2, 2011

கொழும்பு நகரில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்ற சதி!!

May 3, கொழும்பு கொம்பனி வீதியா பகுதியிலுள்ள சுமார் 10 முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து அகற்றி தூரப் பிரதேசங்களுக்கு இடமாற்றம் செய்யும் முயற்சியில் சிங்கள அரசு இரகசியமாக ஈடுபட்டுள்ளது.

என்கிற தகவல் அறிந்து கொந்தளித்துப் போயிருக்கிறார்கள் கொழும்பு முஸ்லிம்கள்.
மத்திய கொழும்பு பகுதியில் முஸ்லிம்களே பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள்.

இதை சிங்கள அரசு பிரச்சினையாகக் கருதுகிறது. முஸ்லிம்களை அப்புறப்படுத்தி சிங்கள மக்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக கொழும்பு நகரத்தை மாற்றியமைக்க இராஜ பக்ஷே அரசு முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

“முன்பு கொழும்பில் 92 சதவிகித பெரும்பான்மையாக இருந்த சிங்களச் சமூகத்தின் ஜனத்தொகை தற்போது 27 சதவீதமாக குறைந்து போயுள்ளதாக சில சிங்களப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

ஆனால் உண்மை அதுவல்ல. கொழும்பு நகரம் உருவானதே முஸ்லிம்களால்தான். முஸ்லிம்கள்தான் கொழும்பு நகரை வளர்த்தெடுத்தவர்கள். இதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன என்கிறார் கொழும்பு பல்கலைக் கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதுக் கொள்கைத்துறையின் விரிவுரையாளரான எம்.எஸ். அனீஸ்.

தற்போது மாநகர சபையாக இருக்கும் கொழும்பு நகரத்தை மாநகர அதிகார சபையாக மாற்றப் போவதாக அறிவித்து அதன் அடிப்படையில் முஸ்லிம்களை இடமாற்றம் செய்ய ராஜபக்ஷே அரசு முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கு, “கொழும்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்வதென்றால் அதற்கு அதிகார சபை என்று ஒன்று தேவையில்லை. மாநகர சபையை வைத்துக் கொண்டே அந்த அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்த முடியும்'' என்று கருத்து தெரிவித்தார் அனீஸ்.

தற்போது சிறிது சிறிதாக கொழும்பில் முஸ்லிம் குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. கொம்பனி வீதியா பிரதேசத்தில் 400 ஏக்கர் நிலப்பரப்பை கையகப்படுத்த இரகசியமான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது'' என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார்.

கடந்த 2010 ஜூன் மாதத்தில் கொம்பனி வீதியா பிரதேசத்திலிருந்த முஸ்லிம் குடியிருப்புகளை இடித்துத் தள்ளியது சிங்கள அரசு. பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் வரும் நகர அபிவிருத்தி அத்தாரிட்டி போலிஸ் மற்றும் ராணுவத்தினரின் உதவியுடன் கொம்பனி வீதியா பகுதியில் மியூஸ் தெருவிலுள்ள வீடுகளை இடித்துத் தள்ளியது.

பல குடும்பங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு அவர்களின் உடமைகளோடு வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும், அங்கிருந்த வீடுகள் சட்டப்பூர்வமானது என்பதற்கான ஆவணங்களை குடியிருப்புவாசிகள் வைத்திருப்பதாகவும் செய்தி கூறுகிறது.

2010 மே 8ம் தேதி அதிகாலையில் போலீஸ், இராணுவம், கலவரத் தடுப்பு போலீசார் ஆகிய படைகளின் துணையோடு, மியுஸ் தெருவிலிருந்த 20 முஸ்லிம் வீடுகள் புல்டோசரால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

வேறு மாற்று இடம் குறித்த எவ்வித உத்திரவாதமும் தராமல் அரசாங்கம் வீடுகளை இடித்துத் தள்ளி, 20 குடும்பங்களின் எதிர் காலத்தை கேள்விக் குறியாக்கியது என்று நீண்ட பட்டியலைத் தருகிறது M.I.C. எனப்படும் முஸ்லிம் தகவல் மையம்.

“மியுஸ் தெருவிலிருந்து குடியிருப்புவாசிகள் கட்டாய வெளியேற்றம்'' என்ற தலைப்பில் கொம்பெனி வீதியா பகுதியில் நடந்த கட்டாய வெளியேற்றம் குறித்த தகவல்களைத் திரட்டி கையேடாக அது வெளியிட்டிருக்கிறது.

தற்போது மாநகர அதிகார சபை என்ற பெயரில் முஸ்லிம்களை கொழும்பிலிருந்து வெளியேற்ற நடைபெறும் நிகழ்வுகளை நீண்ட கால திட்டத்தின் வெளிப்பாடுகளாகவே பார்க்க முடிகிறது. கொழும்பு மாநகர சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டால் மேயராக, துணை மேயராக முஸ்லிம்களே தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியங்கள் இருக்கிறது.

அதிகாரப் பதவிகளுக்கு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்படும் சூழ்நிலை இருப்பதாலும், மாநகர அதிகார சபை ஒன்றை உருவாக்கி முஸ்லிம்களின் பலத்தைக் குறைக்க அரசு முயற்சிப்பதாகவும் முஸ்லிம் பிரதிநிதிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எது எப்படி இருப்பினும், விடுதலைப் புலிகளுடனான யுத்த முடிவுக்குப்பின் அல்லது புலிகளின் வீழ்ச்சிக்குப்பின் முஸ்லிம்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் பார்வை அழுத்தமாக பதிந்திருக்கிறது என்பதைத்தான் இதுபோன்ற நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

ஆனாலும், இலங்கையின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மௌனம் சாதித்து வருகின்றன. அது இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு கேடாகவே முடியும் என்பதை இந்தத் தலைமைகள் உணர்ந்து கொண்டு, சிங்கள அரசின் சதித் திட்டங்களை முறியடிக்க அரசியலுக்கு அப்பால் நின்று கைகோர்க்க வேண்டும் என்பதே இலங்கை முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments: