Jun 20, 2011

இன்றைய அட்டைக்கத்திகளும் அன்றைய போர்வாளும்! M.R. ராதா!

JUNE 21, ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் எனப்படும் எம். ஆர். ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன.

இவருடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடைவிதித்த போது, “குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மதுவிலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது” என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா

பார்ப்பான் என்ற வார்த்தையையே பயன்படுத்தாமல் பெரியார் வாழ்க்கையைத் திரைப்படமாக்கத் தெரிந்த ‘அட்டைக்கத்திகள்’ நிறைந்த இந்தக் காலத்தில். ‘ராதா எனும் பெரியாரின் துருவேறாத போர்வாளை’, நினைவு கூர்வது, அவசியமாகும் நாடகத் துறையில் பலருக்கு முன்மாதிரியாக இருந்த ராதாவிற்கு ஈரோட்டில் நாடகம் நடந்தபோது பெரியாரும் அவரது குடியரசு இதழும் அறிமுகம் ஆனது.

பார்ப்பனரல்லாத இந்துக்கள் பலர் முதல் தலைமுறையாகக் கல்வி பெறத் துவங்கிய காலமது. 1942இல் ராதா நடித்த ‘இழந்த காதல்’ எனும் நாடகம், நிலவுடைமை ஆணாதிக்கத்திற்கு எதிராகக் காதலை ஆதரிக்கிறது. சிற்றரசு எழுதி 1940 முதல் நடிக்கப்பட்டு வந்த ‘போர்வாள்’ நாடகம், மன்னராட்சியின் கொடுங்கோன்மை, பொருந்தாத் திருமணம், புராண ஆபாசம், கோயிலில் நடைபெறும் ஊழல் என அனைத்தையும் பேசுகிறது.

1947இல் கருணாநிதி எழுதிய ‘தூக்குமேடை’ பார்ப்பனர்களின் சூழ்ச்சி, மிராசுதாரர்களின் காமக் களியாட்டங்கள், நேர்மையானவர்களின் காதலைத் தோற்கடிக்கும் பொய் சாட்சிகள் ஆகியவற்றை அம்பலப்படுத்துகிறது. ரத்தக்கண்ணீர் ஆரம்பத்தில் நாடகமாகவும், 1954 நவம்பரில் திரைப்படமாகவும் வெளிவந்தது. இறுதிக்காட்சியில் நண்பனுக்கே தனது மனைவியை மணம் முடித்து வைப்பார் தொழுநோயாளியான ராதா.

தாசி வீட்டுக்குப் போனாலும் கணவனே கண்கண்ட தெய்வமென்று காத்திருந்த பெண்களுக்கு சரியான வழியைக் காட்டினார் ராதா. தனது சிலையை ஊருக்கு நடுவே வைத்து எப்படி வாழக்கூடாது என்பதற்கு தன்னுடைய பாத்திரத்தையே உதாரணமாக்குமாறும் கோருவார். இளைஞர்கள் ரசித்தார்கள். பழமை விரும்பிகளுக்கோ இப்படம் வயிற்றில் புளியைக் கரைத்தது.

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திய கம்பராமாயண நாடகம் அன்று மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்து வருகையில் சென்னையில் 28.8.1954 அன்று உண்மையான ராமாயண நாடகம் நடத்த ராதா முன்வந்தார். நாடகத்திற்கு தடை விதித்தது அரசு. இதற்காகவே தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்துவிட்டு பெரியார் சென்னை திரும்பினார்.

ராமாயண ஆராய்ச்சி பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். சட்டப்பூர்வமான போராட்டத்தை மேற்கொண்டதுடன், சட்டத்தை மீறி நாடகம் நடத்தி சிறை செல்லவும் தயார் என அறிவித்தார் ராதா. அரசு பணிந்தது. ராதாவின் ராமாயண நாடகம் பெரியார் தலைமையில் 15.9.1954 அன்று சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் நடந்தது.

வால்மீகி ராமாயணம் உள்ளிட்ட பல்வேறு ராமாயணங்களிலிருந்தும் தனது நாடகத்துக்கான ஆதாரங்களை மேற்கோள்களாக எழுதி அரங்கின் வாயிலில் வைத்து, எதிரிகளின் வாயை அடைத்தார் ராதா. பார்ப்பனர்களால் ராதாவின் நாடகத்தை கீமாயணஎன்று தூற்ற முடிந்ததேயன்றி அவரை மறுக்க முடியவில்லை.

கும்பகோணத்தில் நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்திலேயே கைதானார் ராதா. ‘ராமன் வேடத்தைக் கலையுங்கள்’ எனக் கூறிய காவல்துறையினரிடம் ‘வேடம் கலையாது, வில் கீழே விழாது, கலசம் கீழே வராது’ எனக் கூறி, காவல் நிலையம் நோக்கி நடந்தார் ‘ராதா’ராமன். வீதியையும் மேடையாக்கும் வித்தை அவருக்குத் தெரிந்திருந்தது

ராதாவின் ராமாயணத்திற்காக சென்னை மாகாண சட்டசபையில் சி.சுப்ரமணியம் ஒரு நாடகத்தடைச் சட்டத்தையே கொண்டு வந்தார். “எங்களால் பழைய ராமாயணத்தை பல நூற்றாண்டுகளாகத் தாங்கிக் கொள்ள முடிந்தது. அவர்களால் புதிய ராமாயணத்தை ஐந்து ஆண்டுகள் கூடத் தாங்க முடியாது” என்று சனாதனவாதிகளைக் கேலி செய்தார் அண்ணா.

தனது ராமாயண நாடகத்திற்கு எதிர்ப்பு வலுத்ததால் ராதா இம்மியளவும் அசரவில்லை. மாறாக, திருவாரூர் தங்கராசுவை எழுத வைத்து, பத்து அவதாரங்களையும் தோலுரிக்கும் ‘தசாவதாரம்’ நாடகத்தை அடுத்ததாக நடத்தத் தொடங்கினார். காளிமார்க் பரமசிவம் நாடார் எம்.ஆர். ராதா சோடா என்ற பெயரில் ஒரு சோடாவையே அறிமுகப்படுத்தினார்.

ராதா வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர்தான் எனினும் அதிகார வர்க்கத்தின் மீதும், பணக்காரர்கள், மிட்டாமிராசுகள் மீதும் ஒருவிதமான வெறுப்பையும் ஏளனப் பார்வையையும் அவர் கொண்டிருந்ததைக் காண முடிகிறது. ராதாவின் ரத்தக்கண்ணீர் நாடகத்தைப் பார்க்க வந்த ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் ராதாவின் சொல்லடிக்குத் தப்பவில்லை. “அடியே காந்தா, சினிமாவுல முதலாளிங்க அதச் செய்றேன், இதச் செய்றேன்னு ஆசை காட்டுவாங்க. அதெல்லாம் நம்பி மோசம் போயிராத” என்று காந்தாவை எச்சரிப்பார் ராதா.

இம்பாலா காரில் தன்னுடைய மாட்டுப்பண்ணைக்கு வைக்கோலை ஏற்றி பண்ணையில் வேலை செய்யும் ஆட்களையும் ஏற்றி அனுப்புவார் ராதா. அந்தஸ்தின் சின்னமாக இந்தக் காரை வைத்து மினுக்கிக் கொண்டிருந்த பெரிய மனிதர்கள் இதைக் கண்டு புழுங்கினர்.  சிவாஜி போன்ற நடிகர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து கேட்டபோது “சாயம் பூசிய தகரத்துக்கு இவ்வளவு மதிப்பு கொடுக்குறீங்களே” என்று அவர்களைக் கேலி செய்திருக்கிறார் ராதா.

“நாட்டிலே அதிகமா உழைக்கிறவனுக்கு கொஞ்சமா கூலி கொடுக்கிறான். சினிமாவில கொஞ்சமா உழைக்கிறவனுக்கு அள்ளிக் கொடுக்கிறான். உலகத்தில் அசமத்துவம் ஒழிக்க முடியாதபடி சபிக்கப்பட்ட கொள்ளைப் பிரதேசம்னா அது சினிமா ஒண்ணுதான்” என்று பொது மேடையிலேயே சாடியிருக்கிறார் ராதா. பகல் நேர சினிமாக் காட்சியை எதிர்த்திருக்கிறார். எம்ஜியார், சிவாஜி ரசிகர் மன்றங்கள் கொள்ளை நோயாகப் பரவிக் கொண்டிருந்த காலத்தில் ‘கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே’ என்று தாக்கியிருக்கிறார்.

அவர் தி.க. உறுப்பினராக இல்லாத போதிலும், பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம், பிராமணாள் ஓட்டல் என்ற பெயரில் உள்ள பிராமாணாள் என்ற வார்த்தையை அழிக்கும் போராட்டம், சட்ட எரிப்புப் போராட்டம் போன்றவற்றை ஆதரித்து பிரச்சாரம் செய்ததுடன் சிலவற்றில் கலந்தும் கொண்டார்.

பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக விழுமியங்கள், சோசலிச அபிமானம், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் கலக மனோபாவம், அலங்காரமற்ற பெரியாரின் எளிய எள்ளல் மொழி இவற்றுடன் ஒரு விதமான நிலப்பிரபுத்துவ தோரணையும் கலந்த ஆளுமைதான் ராதா.
-யாழினி-

4 comments:

தலைத்தனையன் said...

HATS OFF TO M.R. RADHA. HE IS A KIND OF INDISPENSABLE CHARACTER. EVEN IN HIS CINE PART, HE HAD BRAVE STAND. HE MUST BE AN UNEQUIVOCAL FOR HIS DARE AND SHOOT THE POINT TO THE SOCIETY OR TO THE MISLEADING PERSONALITY IN THE COMMUNITY. HE NEVER HAD A SECOND THOUGHT TO TAKE HIS MISSION ONCE HE HAD STARTED.

Anonymous said...

யாழினி ரொம்ப நல்ல ஒரு செய்தியை போட்டுள்ளீர்கள். ராதாவை பற்றி அறியாத நல்ல அறிய தகவல்கள் அடங்கியதாக இருந்தது இந்த செய்தி வாழ்த்துக்கள்.

Anonymous said...

very nice keep it up

6 said...

இன்றைய தன்னலம் முன்

நடிகவேள் என்றும் பொதுநலம்