Jul 8, 2011

பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை!

JULY 09, இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு நாயகன் பாபாராம்தேவ். காவியுடையில் காட்சி தரும் "யோகா மாஸ்டர்' பாபாராம்தேவ். இவரை பற்றி சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள். பசுமாட்டை வெட்டினால் தூக்குத் தண்டனை தர வேண்டும் என்று வடமாநிலங்களில் இயக்கம் நடத்தியவர்.

இப்போது, வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கியோரையும் தூக்கில் போட வேண்டும் என்கிறார்.  காவி உடை தரிக்கும் இவரின் சொத்து மதிப்பு 5,000 கோடி ரூபாய் என்றும், ஆண்டு வருமானம் 1,000 கோடி ரூபாய் என்றும் செய்திகள் கூறுகின்றன.

உத்தரகாண்ட் மாநிலம் பதஞ்சலியில் மிகப் பெரிய யோக பீடம்; 300 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத மருத்துவமனை; 200க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்; மருந்து மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு; ஸ்காட்லாந்து நாட்டில் சொந்தமான தனித் தீவு என்று கொடிகட்டிப் பறக்கிறது இவரது சாம்ராஜ்யம்.

"பசுவதை'க்கு மரண தண்டனை கோரும்,  இவரது மருந்து நிறுவனத் தயாரிப்பில், விலங்குகளின் எலும்புகள் கலக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்து, மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. பா.ஜ.க., பார்ப்பன இந்துத்துவ சக்திகள் புடை சூழ "ராம்லீலா' மைதானத்தில் இவர் "உண்ணாவிரத'த்தைத் நடத்தினார். ஊழல் அரக்கனாக – 10 தலை ராவணன் உருவத்தை அமைத்து, "ராம ராஜ்ய' பெருமையைப் பறை சாற்றினார்கள்.

ஊழல் ஒழிப்பு பேரார்வம், திடீரென்று இவர்களிடம் பெருக்கெடுத்து ஓடியது ஏன்? காரணம் இருக்கிறது. அண்மைக்காலமாக காமன் வெல்த் விளையாட்டு ஊழல்; ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்; 2ஜி அலைக்கற்றை ஊழல் என்று ஊழல்கள் அடுத்தடுத்து அம்பலமாகி – மக்களிடையே ஊழல் எதிர்ப்பு உணர்வு உருவானது. பாரதிய ஜனதா, இந்த உணர்வுகளை அறுவடை செய்ய திட்டமிட்டது.

அவர்களின் திட்டமெல்லாம் 1975 ஆம் ஆண்டை மீண்டும் கொண்டு வரலாம் என்பதுதான். ஜெயப்பிரகாஷ் நாராயண், அப்போது – இந்திரா ஆட்சிக்கு எதிராக "முழுப் புரட்சி' இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம், இந்துத்துவா சக்திகள் – ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. அதே நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதே அத்வானிகளின் துடிப்பு.

மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்துத்துவா சக்திகள், மீண்டும் மக்கள் மன்றத்தில் கால் பதிப்பதற்கு – அவர்களிடம் எந்த செயல் திட்டமும் இல்லை. மீண்டும் "அயோத்தி ராமனிடம்' அடைக்கலம் புகுந்தால், மக்கள் ஆதரவு இருக்கப் போவது இல்லை என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்து கொண்டு விட்டார்கள். இது ஹிந்துத்துவா பா.ஜ.க. பரிவாரங்களின் திட்டமிட்ட சூழ்ச்சியே அல்லாமல் வேறில்லை.