Sep 10, 2015

யார் இவர்கள்? அதிர்ச்சி ரிப்போர்ட்!

1). நான் அவர்கள் மேல் ஆத்திரமாக இருந்தேன். எதற்காக நூறு ரூபாய் மதிப்புள்ள துப்பாக்கித் தோட்டாக்களை வீணாக்க வேண்டும்? என்று எண்ணி என்னிடமிருந்த அரிவாளைப் பயன்படுத்தி ஐந்து பேரின் தலைகளை சீவியெறிந்தேன்” – சந்தகேஷ்வர் சிங்.
2). ”அட.. நீங்க பழுத்த மாம்பழங்களை அடிக்க மா மரத்தின் மேல் கம்பை வீசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. பழங்களும் விழும், சில காய்களும் கூட விழலாம். பழத்தை விட்டு காயை விழ வைத்ததற்காக உங்களை தண்டிக்கவா முடியும்? அதே மாதிரி தான்.. எங்க ஆளுங்களை இளைஞர்களைக் கொல்லத் தான் அனுப்பினோம்… அவங்க அந்த வேலையைப் பார்க்கும் போது சில குழந்தைகளும் கூட செத்திருக்கலாம். இதுக்கெல்லாம் தண்டிக்கவா முடியும்? அப்படியே தண்டிக்கனும் என்றாலும், அதுக்காக அவர்களுக்கு கொடுக்கும்  சம்பளத்தையா பிடித்தம் செய்ய முடியும்?” – ரவீந்திர சவுத்ரி
3). ”எங்க ஆளுங்களை அனுப்பும் போது 36 இன்ஞ்ச் வயிறு இருந்தா போட்டுத் தள்ளுங்கன்னு சொல்லி தான் அனுப்பினோம். அது ஆணோ பெண்ணோ… ஒரு வேளை பெண்ணா இருந்தா அவ வயித்திலேர்ந்து எதிர்காலத்தில பிள்ள பூச்சி எதாவது பிறந்து நக்சலைட்டா ஆயிடுமில்லே?” –சைலேந்திர வாத்சாயன். 
யார் இவர்கள்? எதைப் பற்றிப் பேசுகிறார்கள்? இவர்கள்தான் ரன்வீர் சேனா என்கிற இந்து பயங்கரவாத அமைப்பினர்.
கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி தில்லி பத்திரிகையாளர் மன்றத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார், தெஹல்கா பத்திரிகையைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும், தற்போது கோப்ரா போஸ்ட் என்கிற இணைய பத்திரிகையை நடத்தி வருபவருமான அனிருத் பஹால். இவர் ஸ்டிங் ஆபரேஷன்களின் (குற்றவாளிகளுக்கு தெரியாமல் ரகசிய கேமிராக்களை பொருத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வருவது) தந்தை என்று அறியப்படுபவர். 
1994-ம் ஆண்டிலிருந்து 2000-மாவது ஆண்டு வரை பீகார் மாநிலத்தில் நிலபிரபுக்களின் தனியார் குண்டர் படையான ரன்வீர் சேனா நிகழ்த்திய ஆறு மோசமான படுகொலைச் சம்பவங்களில் நீதி மன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷன் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்காகவே இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் தெஹல்கா பத்திரிக்கையின் நிறுவனர் அனிருத் பஹால்.
பீகார் மாநிலத்தின் சார்த்துரா(1995), பதனி டோலா(1996), லக்‌ஷ்மன்பூர் பதே (1997), இக்வாரி (1997), சங்கர் பிகா (1999), மியான்பூர் (2000) ஆகிய ஆறு இடங்களில் நடந்த கொடூரமான தாக்குதல்களில் சுமார் 144 தலித்துகள் ரன்வீர் சேனா தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். ரன்வீர் சேனா தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அதிகாரபூர்வமாக வெளிவந்த தகவல்கள் அடிப்படையில் சுமார் 300க்கும் மேற்பட்ட தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கணக்கில் வராதது எத்தனையோ!
ரன்வீர் சேனா நிகழ்த்திய படுகொலைகளில் ஆறு சம்பவங்களே மேலே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் படுகொலைகள் தொடர்பான சில வழக்குகளில் கீழ்மை நீதிமன்றம் குற்றவாளிகளைத் தண்டித்தாலும், உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீடுகளின் போது குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே, “போதிய சாட்சிகள்” இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை சந்தித்து ’ரன்வீர் சேனா குறித்து திரைப்படம் இயக்க வுள்ளதாகவும், அதற்கான தகவல்கள் தேவை’ என்கிற பெயரில் தெஹல்கா & கோப்ரா போஸ்ட் நிருபர்கள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது தமது ‘சாதனைகள்’ குறித்து ரன்வீர் சேனா பயங்கரவாதிகள் பீற்றிக் கொள்வதை இரகசிய கேமராக்களில் பதிவு செய்துள்ளனர். அதையே ஆகஸ்டு 17-ம் தேதி தில்லியில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது வெளியிட்டனர். 
இந்த வாக்குமூலத்தில் தாங்கள் வழக்குகளை விட்டு வெளிவர பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான முரளி மனோகர் ஜோசி உதவி செய்தார் என்று குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். இந்த ரகசிய ஆவணங்கள் வெளியான பின்பும் குற்றவாளிகள் பகிரங்கமாக வெளியே சுற்றி திரிகிறார்கள். இவர்கள் மேலும், முரளி மனோகர் ஜோசி மீதும் இந்துத்துவா மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா? தலித்மக்கள் இந்துக்கள் இல்லையா இதுவே நமது கேள்வி. 
பதிவின் மூல ஆதாரம் -வினை செய் வினவு.

1 comment:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

http://www.ypvnpubs.com/